22.12.13

நடிகர் சஞ்சய் தத் பரோலில் விடுதலை



நடிகர் சஞ்சய் தத் ஒருமாத கால பரோலில் புணே எரவாடா சிறையில் இருந்து சனிக்கிழமை விடுவிக்கப்பட்டார். பரோல் குறித்து சர்ச்சை நிலவியதால் அனுமதி கிடைத்த இருவாரங்கள் கழித்து அவர் விடுவிக்கப்பட்டார்.
கடந்த 1993ஆம் ஆண்டு மும்பை கலவரத்தின் போது சட்டவிரோதமாக துப்பாக்கிகள் வைத்திருந்ததாக நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஏற்கெனவே சிறையிலிருந்த காலம் போக எஞ்சிய தண்டனைக் காலத்தை சஞ்சய் தத் அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனையடுத்து, மும்பை ஆர்தர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சஞ்சய் தத் கடந்த மே மாதம் புணே மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் தனது மனைவி மன்யாதாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பரோலில் விடுவிக்குமாறு சஞ்சய் தத், புணே மண்டல ஆணையர் பிரபாகர் தேஷ்முக்கிடம் கோரிக்கை மனு அளித்தார்.
இதனை ஏற்று கடந்த 6ஆம் தேதி சஞ்சய் தத்தை பரோலில் விடுவிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இதனிடையே, சஞ்சய் தத்தின் மனைவி, பிறந்த நாள் நிகழ்ச்சி மற்றும் திரைப்பட திரையிடல் நிகழ்ச்சியில் பங்கேற்றதாக வெளியான புகைப்படங்களால் அவரது உடல்நிலை குறித்து சந்தேகம் எழுந்தது.
இந்தச் சூழ்நிலையில் சஞ்சய் தத்துக்கு ஆதரவாக அரசு செயல்படுவதாக கூறி, இரண்டாவது முறையாக அவரை விடுவிக்க எதிர்ப்புத் தெரிவித்து எரவாடா சிறைக்கு முன்பாக சில அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் எழுந்த சர்ச்சையை தொடர்ந்து சஞ்சய் தத்துக்கு பரோல் வழங்கும் விவகாரத்தில் உண்மை நிலவரத்தை கண்டறிய மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் விசாரணைக்கு உத்தரவிட்டார். சஞ்சய் தத்துக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்ற அக்டோபரில் ஒரு மாதம் மருத்துவ விடுப்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment