எப்படியாவது பிரதமர் பதவியை அடைந்து விடலாம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கனவு காண்பதாக நடிகை குஷ்பு குற்றஞ்சாட்டினார்.
திமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி அந்தக் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, சேலம் தாதகாப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நடிகை குஷ்பு பேசியது:
ஏற்காடு இடைத் தேர்தலில் திமுகவுக்கு கிடைத்த வாக்குகளே உண்மையான வாக்குகள். அந்தத் தேர்தலில் மனசாட்சிப்படி திமுகதான் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியினர் தங்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் மட்டும் திமுகவைப் பயன்படுத்தி வந்தனர். அவர்களால் நாங்கள் ஏமாற்றப்பட்டோம். எனவேதான் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியே வந்தோம். ஆனால், நாங்கள் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வந்ததை யாரும் புரிந்து கொள்ளாமல் பேசுகின்றனர்.
தமிழகத்தில் பல்வேறு பிரச்னைகள் நிலவுகின்றன. இவற்றுக்குத் தீர்வு காண முடியாத முதல்வர் ஜெயலலிதா, நான் தான் அடுத்த பிரதமர் என்று கூறி வருகிறார். தமிழர்களின் மீது ஜெயலலிதாவுக்கு அக்கறை இருந்திருந்தால் சேது சமுத்திர திட்டத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருக்கமாட்டார்.
உண்மையான தமிழர்களின் தலைவர் கருணாநிதிதான். அட்டப்பாடி தமிழர்கள் பிரச்னையாகட்டும், ஈழம், சிங்கப்பூர் தமிழர்கள் பிரச்னையாகட்டும் அனைத்துக்கும் முதலில் குரல் கொடுப்பவர் அவர்தான்.
இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத இடத்தை வகித்து வரும் கருணாநிதிக்கு பிரதமர் வாய்ப்பு பல முறை வந்தது. ஆனால் தமிழர்களின் எதிர்காலத்துக்காகவே அவற்றை அவர் தட்டிக் கழித்தார். ஆனால், தமிழகத்தைத் தவிர வேறு எங்கும் செல்வாக்கு இல்லாத ஜெயலலிதா, எப்படியாவது பிரதமர் ஆகிவிடலாம் என்று கனவு காண்கிறார்.
அவரது ஒட்டு மொத்த பிரதமர் கனவின் நோக்கமே பெங்களூரு வழக்கை முடிப்பது தான்.
ஈழத் தமிழர் நலனுக்காக தீர்மானம் நிறைவேற்றுவதாகக் கூறிய ஜெயலலிதா, அந்தத் தீர்மானத்துக்கு இடப்பட்ட பேனா மை காய்வதற்குள் தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்ற சுற்றுச்சுவரை இடித்து தனது இரட்டை வேடத்தைக் காட்டியவர் என்றார் குஷ்பு.
சேலம் மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், வீரபாண்டி ஆ.ராஜா, முன்னாள் மேயர் சூடாமணி, மாநகரச் செயலர் எஸ்.டி.கலையமுதன், துணைச் செயலர் குணசேகரன் உள்ளிóட்ட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment