மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் சனிக்கிழமை தமது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து மத்திய அமைச்சர்கள் சிலரை கட்சிப் பணிக்காக அனுப்ப காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதன் முதல் கட்டமாக ஜெயந்தி நடராஜன், தமது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து மேலும் சில அமைச்சர்கள் கட்சிப் பணிக்கு அனுப்பப்படலாம் என்று தெரிகிறது.
பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஜெயந்தி நடராஜன் அளித்திருந்த ராஜிநாமா கடிதம், குடியரசுத் தலைவருக்கு முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டது. ராஜிநாமாவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஏற்றுக் கொண்டதாக சனிக்கிழமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து, ஜெயந்தி நடராஜன் வகித்து வந்த மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை பொறுப்பு பெட்ரோலிய துறை அமைச்சர் வீரப்ப மொய்லிக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 4 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து, கட்சியை பலப்படுத்தும் வகையில் முக்கியத் தலைவர்களை கட்சிப் பணியில் ஈடுபடுத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணைத் தலைவர் ராகுல் காந்தியும் திட்டமிட்டு வருகின்றனர். இந் நிலையில், ஜெயந்தி நடராஜன் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெயந்தி நடராஜன் (59), மூன்றாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். மத்திய அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையில் தனிப் பொறுப்புடன்கூடிய இணையமைச்சராகவும் செயல்பட்டு வந்தார்.
ஜெயந்தி நடராஜன் தமது அமைச்சர் பதவியை திடீர் என ராஜிநாமாச் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலை கருத்தில் கொண்டு கட்சிப் பணிக்காக அவர் பதவியை ராஜிநாமாச் செய்தாரா அல்லது சில திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தகுதிச் சான்று ஒப்புதல் வழங்குவதில் மிகுந்த காலதாமதம் ஏற்பட்டதால் தொழில்துறையினரிடமிருந்து வந்த புகார்கள் காரணமாக அவர் பதவியை ராஜிநாமாச் செய்தாரா என்பது முழுமையாகத் தெரியவில்லை.
தில்லியில் சனிக்கிழமை இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (ஃபிக்கி) ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, பெரும்பாலான திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைக்காததால் தொழில்கள் முடங்கிப் போயுள்ளன, இதுதான் இன்றைய நிலை. இது விஷயத்தில் சுற்றுச்சூழல்துறை அமைச்சரோ அல்லது மாநில முதல்வரோ முடிவு எடுக்கும் விதத்தில் அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்துள்ளது. அதிகாரப் பரவல் இருந்தால்தான் வளர்ச்சி காணமுடியும் என்று பேசியிருந்தார். இதன் எதிரொலியாக ஜெயந்தி நடரஜான் பதவியை ராஜிநாமா செய்திருக்கலாமோ என்ற ஊகமும் எழுந்துள்ளது.
எனினும் மக்களவைத் தேர்தலை கருத்தில்கொண்டு கட்சிப் பணியாற்ற விரும்பியதன் காரணத்தாலேயே பதவியை ராஜிநாமாச் செய்ய முடிவு செய்தேன். இதைத் தொடர்ந்தே ராஜிநாமா கடிதத்தை பிரதமரிடம் அளித்தேன். அவரும் எனது ராஜிநாமாவை ஏற்றுக்கொண்டுவிட்டார் என்று ஜெயந்தி நடராஜன் கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயந்தி நடராஜனைத் தொடர்ந்து மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சர் சச்சின் பைலட், பாதுகாப்புத்துறை இணையமைச்சர் ஜிதேந்தர் சிங் பன்வர் உள்ளிட்டோரும் கட்சிப் பணிக்கு அனுப்பப்படலாம் என்று தெரிகிறது.
அண்மையில் நடைபெற்ற ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராக சச்சின் பைலட்டை நியமித்து கட்சியை பலப்படுத்தி மக்களவைத் தேர்தலை சந்திக்கலாம் என காங்கிரஸ் மேலிடம் கருதுவதாகத் தெரிகிறது.
இதேபோல அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியையும் மாற்றியமைக்க கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதாவது தற்போது பொதுச் செயலாளர்களாக இருக்கும் சிலர் நீக்கப்பட்டு அந்த இடத்துக்கு புதிதாக சிலர் நியமிக்கப்படாம் எனத் தெரிகிறது. உதாரணமாக ராகுல் காந்திக்கு மிக நெருக்கமான ஜிதேந்தர் சிங் பன்வர், காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. பன்வர் ஏற்கெனவே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளராக இருக்கும் அசோக் தன்வர் ஹரியாணா மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் மேலிட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment