22.12.13

இலங்கைப் பிரச்னைக்கு உள்நாட்டுத் தீர்வு: தமிழ் அரசியல் தலைவர்களுக்கு அதிபர் ராஜபட்ச அழைப்பு


இலங்கை இனப் பிரச்னைக்கு உள்நாட்டிலேயே தீர்வு காண்பதற்காக, தம்முடன் கைகோக்க வருமாறு தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அதிபர் ராஜபட்ச அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை அதிபர் ராஜபட்ச இது குறித்துப் பேசியதாவது:
இலங்கையில் அமைதியும், சமாதானமும் நிலவ இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் ஆர்.சம்பந்தன் ஆகியோர் அரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். அமைதியை நிலைநாட்டும் வகையில், வெறுப்பு மற்றும் பகைமைகளை மறந்து அனைத்து அமைப்பினரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.
தீர்வை ஏற்படுத்த வெளிநாடு ஒன்றை எதிர்நோக்கியிருப்பதை விட, நமது பிரச்னைக்கு நாமே தீர்வு காண முடியும். அத்தீர்வால் நாம் பெருமிதம் கொள்ளவும், மற்றவர்களுக்கு உதாரணமாக அமையவும் முடியும். எதிர்கால சந்ததிகளுக்காக இந்த தீர்வை காண்பது நமது கடமையாகும்.
கடந்த 25 ஆண்டுகளில் முதன் முறையாக வடக்குப் பகுதியில், மாகாண சபை உருவாக்கப்பட்டுள்ளது. இது நமது ஜனநாயகத்தின் முக்கிய மைல் கல்லாகும்.
தமிழர் பகுதிகளில் தமிழர்களுக்கு வாழ்வாதார ஆதரவை அளித்து, பொதுச் சேவைகளை வலுப்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது. வடக்குப் பகுதியின் பிரச்னையைத் தீர்க்க மும்மொழி தேசிய கொள்கையை விரிவுபடுத்தவும் அரசு முடிவு செய்துள்ளது என்று அதிபர் ராஜபட்ச தெரிவித்தார்.
இலங்கையில் நடைபெற்று வந்த உள்நாட்டுப் போர் 2009ஆம் ஆண்டு முடிவடைந்தது. இதனிடையே, மனித உரிமை மீறல்கள் மற்றும் நல்லிணக்க, மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மந்த கதியில் எடுக்கப்பட்டு வருவது ஆகியவற்றை முன்வைத்து ஜெனீவாவில் நடைபெற்ற ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் தொடர்ச்சியாக 2 ஆண்டுகளாக இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், இலங்கையில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விவாதிக்க உள்ளனர். இந்நிலையில், அதிபர் ராஜபட்ச தம்மோடு இணைந்து செயல்படுமாறு தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment