கணித மேதை ராமானுஜனின் பிறந்த வீட்டை அருங்காட்சியகமாக மாற்ற ஈரோடு மாமன்றத்தில் 9 மாதங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லாமல் அப்படியே உள்ளது.
உலகப் புகழ்பெற்ற கணிதமேதை ஸ்ரீநிவாச ராமானுஜன், ஈரோடு அழகரி சிங் வீதியில் 22.12.1887-ஆம் ஆண்டில் பிறந்தார். அவருடைய தந்தையின் பெயர் சீனிவாசன், தாயார் பெயர் கோமளத்தம்மாள்.
கும்பகோணத்தை பூர்வீகமாகக் கொண்டிருந்த அவரது தாய்வழிப் பாட்டனார் ஈரோடு நீதிமன்றத்தில் குமாஸ்தாவாக பணியாற்றினார். கோமளத்தம்மாள் தனது பிரசவத்துக்காக ஈரோட்டுக்கு தாய் வீட்டுக்கு வந்தபோது, இங்கு ராமானுஜன் பிறந்தார். அவரது பிறப்பு குறிப்பு, அப்போதைய ஈரோடு நகர்மன்ற ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குழந்தை பருவத்தில் சில ஆண்டுகள் வரை ஈரோட்டில் இருந்த அவர், பள்ளிப்படிப்பு படிக்க கும்பகோணம் சென்றுவிட்டார். தனது 13-வது வயதில் புதிய தேற்றங்களை கண்டறியத் தொடங்கினார். கல்லூரியில் சேர்ந்தபோது, கணக்குப்பாடத்தில் மட்டும் மிகச்சிறப்புடன் மதிப்பெண்களைப் பெற்றார்.
1912-ஆம் ஆண்டில் சென்னைத் துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் குமாஸ்தாவாக ராமானுஜன் பணியாற்றியபோது, இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கணித பேராசிரியர் ஹார்டி வெளியிட்ட கணிதப் புதிருக்கு உலகில் பல நாடுகளில் இருந்தும் பலர் விடைகளை அனுப்பிவைத்தனர். ஆனால், ராமானுஜன் அனுப்பிய விடைதான் மிகச்சரியாக இருந்தது. இதைத்தொடர்ந்து ஹார்டிக்கும், ராமானுஜனுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது.
1913-ஆம் ஆண்டில் ராமானுஜன், தனது கணித ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடித்தவையை ஹார்டிக்கு அனுப்பிவைத்தார். ஹார்டிதான் பின்னாளில் ராமானுஜனின் திறமைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். இப்படிப்பட்ட பெருமைமிக்க கணிதமேதை பிறந்த வீட்டை கணித அருங்காட்சியகமாக மாற்ற 27.3.2013-இல் மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதுவரை இத் தீர்மானத்தை நிறைவேற்ற எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இதுகுறித்து ராமானுஜன் பிறந்த வீடு உள்ள பகுதியின் மாமன்ற உறுப்பினர் ராதாமணி பாரதி (சுயேச்சை) கூறியது:
கணித மேதை ராமானுஜனின் வீட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியபோது, கணித பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் இடையே மிகுந்த வரவேற்பு கிடைத்தது. ஆனால், இத்தீர்மானத்தை நிறைவேற்ற இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த முயற்சியை உடனடியாக செய்துமுடிக்க வேண்டும். முதல்கட்டமாக அவர் பிறந்த அழகிரி சிங் வீதிக்கு ராமானுஜர் வீதி என பெயரிட வேண்டும் என்றார்.
இது குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் என்.மணி கூறியது:
கணித மேதை ராமானுஜனின் பிறந்த வீட்டை பார்க்க வெளிநாடுகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஈரோட்டுக்கு கணித ஆய்வாளர்கள் வந்து செல்கின்றனர். ஆனால், அதை முழுமையாக பார்த்து ஆய்வு செய்ய அவர்களுக்கு முடியவில்லை. எனவே, ஈரோட்டில் கணித அருங்காட்சியகம் அமைத்தால், கணித ஆராய்ச்சியாளர்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றார்.
இதுகுறித்து ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் கூறியது: ராமானுஜன் பிறந்த வீட்டில் கணித அருங்காட்சியகம் அமைத்தால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அதை பார்க்கும்போது, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும். மாமன்றத் தீர்மானத்தை நிறைவேற்ற மாநகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment