22.12.13

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: ஜனவரி 20 முதல் தினமும் விசாரணை


தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை வரும் ஜனவரி 20-ஆம் தேதி முதல் தினமும் விசாரணை நடத்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா முடிவு செய்துள்ளார்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் குவித்ததாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
இந்த வழக்கு நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா முன் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி கூறியது:
இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள அசையும் சொத்துகளை, சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு கொண்டு வருவது தொடர்பாக தமிழக உள் துறைக்கு உத்தரவு அனுப்பப்பட்டது.
இதில், சில சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி, அசையும் சொத்துகளை பெங்களூருவுக்கு அனுப்ப கால அவகாசம் தேவைப்படும் என்பதால், ஜனவரி 6-ஆம் தேதிக்குப் பிறகுதான் முடிவு எடுப்போம் என தமிழக உள் துறை, நீதிமன்றத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, வழக்கின் அடுத்த விசாரணை ஜனவரி 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
மேலும், அடுத்த விசாரணையின் போது, அரசுத் தரப்பு வாதத்தை முன்வைக்க விரும்புவதாக அரசு சிறப்பு வழக்குரைஞர் பவானி சிங் கூறியுள்ளதால், ஜனவரி 20-ஆம் தேதியிலிருந்து நாள்தோறும் இந்த வழக்கு விசாரணை நடைபெறும் என்றார் நீதிபதி.
அப்போது, குறுக்கிட்டுப் பேசிய திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தரப்பு வழக்குரைஞரும், எம்.பி.யுமான தாமரைச்செல்வன், வழக்கின் அடுத்த விசாரணையின் போது, தங்களது கருத்துகளை எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க அனுமதி கோரினார். இதை நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா ஏற்றுக் கொண்டார்.

No comments:

Post a Comment