உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் இதுவரை நடத்தப்படவில்லை.
புதுவையில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் முடிந்து இரண்டேகால் ஆண்டுகளாகி விட்டன. ஆனால், மக்கள் தொகை பட்டியல் இல்லை, வார்டு சீரமைப்பு பணிகள் தாமதம் ஆகிய காரணங்களால் தேர்தல் நடத்துவது தாமதமாகிறது.
புதுவை மாநிலத்தில் புதுச்சேரி, உழவர்கரை, காரைக்கால், ஏனாம், மாஹே உள்ளிட்ட 5 நகராட்சிகள், 10 கொம்யூன் பஞ்சாயத்துகள், 98 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.
இவற்றின் பதவிக்காலம் கடந்த ஜூலை 2011-ல் நிறைவடைந்தன. அதன்பிறகு தேர்தல் நடத்தப்படவில்லை.
உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெருமாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி மாநிலத் தேர்தல் ஆணையராக உதிப்திரே கடந்த மே 2012-ல் பதவியேற்றார்.
அதன்பிறகு நடந்த வழக்கு விசாரணையில், 2013 ஜனவரி 15-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடித்து முடிவுகளை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது. அதையடுத்து, ஜனவரி 4, 8,10 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடக்கும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இந்நிலையில், முன்னாள் கவுன்சிலர் ஆனந்தலட்சுமி, தேர்தலுக்குத் தடை விதிக்க உயர் நீதிமன்றத்தை நாடினார். அவர் தாக்கல் செய்த மனுவில், தொகுதி மறு சீரமைப்பு 2011 மக்கள்தொகை அடிப்படையில் நடைபெறவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. 2 மாதத்துக்குள் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு பட்டியலை பெற்று, தொகுதி சீரமைப்பு பணி முடித்து அதில் இருந்து 3 மாதங்களுக்குள் தேர்தலை நடத்த உத்தரவிட்டது.
இதனால், மார்க்சிஸ்ட் செயலர் பெருமாள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தொகுதி மறு சீரமைப்பு செய்ய காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்து 2 மாதங்களுக்குள் மக்கள்தொகை பட்டியலை பெற்று அதிலிருந்து 2 மாதங்களுக்குள் தொகுதி மறுசீரமைப்பு பணிகளை முடித்து மூன்று மாதத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட்டது.
இந்த உத்தரவையடுத்து வார்டு சீரமைப்புப் பணிகளை நடத்த உயர் கல்வித்துறை முன்னாள் இயக்குநர் பன்னீர்செல்வம் தலைமையில் நாகராஜன், ராஜமாணிக்கம் ஆகியோரை உறுப்பினராகக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. உள்ளாட்சித் துறை இயக்குநர் ரவிபிரகாஷ் உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டார்.
இந்தக் குழு மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநர் அலுவலகத்திலிருந்து நகராட்சி மக்கள்தொகை விவரங்களைப் பெற்றுள்ளது. அதன்படி, நகராட்சி ஆணையர்கள் நகராட்சி வார்டு மறுசீரமைப்பு பணிகளை தொடங்கியுள்ளனர்.
ஆனால், கொம்யூன் பஞ்சாயத்துகளை பொறுத்தவரை வார்டு வாரியாக மக்கள்தொகை விவரம் இல்லை. வருவாய் கிராமம் அடிப்படையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வார்டுகளை சீரமைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. பஞ்சாயத்து வாரியாக கிராமங்களில் மக்கள் தொகை விவரங்கள் அளிக்குமாறு மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநரகத்துக்கு மறுசீரமைப்பு குழு கடிதம் எழுதியுள்ளது.
இந்த விவரம் கிடைத்த பிறகே, வார்டு சீரமைப்பு பணிகளை தொடங்க முடியும். இதனால், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் மேலும் காலதாமதம் ஏற்படும்.
2013 தொடக்கத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டு மறுசீரமைப்பு பணிகள் காரணமாக தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. இப்போது ஆண்டே முடியப் போகிறது.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு: இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் செயலர் பெருமாள் கூறியது: உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி மக்கள்தொகை பட்டியலை மத்திய அரசிடமிருந்து கேட்டுப்பெற மாநில அரசு முயற்சி எடுக்கவில்லை. கால அவகாசம் முடியும் நேரத்தில் மறுசீரமைப்பு குழு அமைக்கப்பட்டது. அதன்பிறகு, மத்திய அரசிடம் கணக்கெடுப்பு பட்டியலை கேட்க முடிவு எடுக்கப்பட்டது. இதில் இருந்தே உள்ளாட்சித் தேர்தலை நடத்த புதுச்சேரி அரசுக்கு விருப்பமில்லை என தெளிவாகிறது.
கிராமங்களுக்கு அங்கீகாரம் தரும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த காங்கிரஸாருக்கும் விருப்பமில்லை. இதனால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment