22.12.13

தேவயானி வீட்டுப் பணிப்பெண் சிஐஏ ஏஜெண்ட்?



இந்தியத் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடேவின் வீட்டில் பணியாற்றிய சங்கீதா ரிச்சர்ட் அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ-வின் ஏஜெண்டாக இருக்கலாம் என்று தேவயானியின் தந்தை உத்தம் கோப்ரகடே தெரிவித்துள்ளார்.
மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:
இந்த விவகாரத்தில் நாங்கள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளோம். தேவயானி தைரியமான பெண். அவர், தனது அன்றாடப் பணிகளை முறையாக செய்து வந்தவர். அவர் மீதான விசா முறைகேடு குற்றச்சாட்டில் சதி உள்ளதை மறுக்க முடியாது.
அவ்வாறாகவே இந்திய அரசும் கருதுகின்றது. தேவயானி மீதான பொய்க் குற்றச்சாட்டுகளை கைவிட்டால்தான், எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று தெரிவித்தார்.
இச்சந்திப்பின்போது இந்திய குடியரசுக் கட்சித் தலைவரும் முன்னாள் மக்களவை உறுப்பினருமான ராம்தாஸ் அதாவலே உடனிருந்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், "சங்கீதா ரிச்சர்ட், சிஐஏ ஏஜெண்டாக இருக்கலாம். இக்கோணத்தில் மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக உத்தம் கோப்ரகடேவின் தலைமையிலான குழுவினர், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். தேவயானி மீதான வழக்கைக் கைவிட இந்தியா தொடர்ந்து அமெரிக்காவுக்கு நெருக்கடி தர வேண்டும். இது தொடர்பாக, அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஒருநாளுக்குமுன் மின்னஞ்சல் அனுப்பியிருந்தோம்.
ஆனால், இதுவரை பதில் ஏதும் வரவில்லை. ஒருவேளை, தேவயானி மீதான வழக்கை கைவிட அமெரிக்கா மறுத்தால், அந்நாட்டுடனான உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் கோரிக்கை விடுப்போம்' என்று அதாவலே தெரிவித்தார்.

No comments:

Post a Comment