12.12.13

சிங்கப்பூர் கலவரம்: மேலும் 3 இந்தியர்கள் கைது



சிங்கப்பூரில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக மேலும் 3 இந்தியர்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட ராஜேந்திரன் ரஞ்சன் (22), மூர்த்தி கபில்தேவ் (24), சத்தியமூர்த்தி சிவராமன் (36) ஆகிய மூன்று பேரும் மேல் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டனர். ஜனவரி மாதம் 18-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த சக்திவேல் குமாரவேலு (33) என்பவர் சிங்கப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனால் இந்திய வம்சாவளியினர் அதிகம் வசிக்கக்கூடிய "லிட்டில் இந்தியா' என்ற பகுதியில் கலவரம் வெடித்தது.
400க்கும் மேற்பட்டோர் இந்தக் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 39 போலீஸார் காயமடைந்தனர். 16 போலீஸ் வாகனங்கள் உள்பட 25 வாகனங்கள் சேதமடைந்தன.
இந்தக் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 24 இந்தியர்களையும் ஒரு வாரம் காவலில் வைக்க நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கில் மேற்கண்ட 24 பேருக்கும் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், பிரம்படிகளும் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.
சிங்கப்பூரில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள், மேற்கண்ட 24 பேருக்கும் சட்ட உதவிகள் வழங்குவது தொடர்பாக சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment