12.12.13

பாதுகாப்பு ஒப்பந்த விவகாரம்: ஆப்கன் அதிபரிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும்: அமெரிக்கா

இருதரப்பு பாதுகாப்பு ஒப்ந்தத்தில் ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் கையெழுத்திடுவதற்கு இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று அமெரிக்கா கோரியுள்ளது. அமெரிக்க அரசின் மூத்த அதிகாரி ஒருவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இந்த வார இறுதியில், ஹமீத் கர்சாய் இந்தியா செல்ல இருப்பதை முன்னிட்டு அமெரிக்கா இவ்வாறு கோரியுள்ளதாகத் தெரிகிறது.
இந்தியப் பயணத்தின்போது பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் இதர தலைவர்களை கர்சாய் சந்திக்க இருக்கிறார். இந்தியாவில் 3 நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள கர்சாய், துருக்கி செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
ஆப்கன்-அமெரிக்கா இடையிலான இரு தரப்பு பாதுகாப்பு ஒப்பந்த விவகாரத்தில் உதவுமாறு கடந்த செப்டம்பரில் அமெரிக்கா வந்திருந்த இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அதிபர் ஒபாமா வலியுறுத்தியதாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கனுக்கான அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதி ஜேம்ஸ் டாபின்ஸ் தெரிவித்தார்.
அந்த சந்திப்பைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூஸன் ரைûஸ சந்தித்துப் பேசினார்.
மேலும், இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் சுஜாதா சிங், அமெரிக்கா வந்திருந்தபோதும் இந்த விவகாரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி மற்றும் துணை அமைச்சர் வில்லியம் பர்ன்ஸ் உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
"அமெரிக்கா-ஆப்கன் இடையிலான இரு தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கர்சாய் கையெழுத்திடுவதற்கு ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்டோர் தனிப்பட்ட முறையில் கர்சாயிடம் வலியுறுத்தி இருக்கிறார்கள் என்பதை அறிவேன்' என்றும் டாபின்ஸ் கூறினார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேற உள்ளன. அதன் பிறகும் அங்கு இப்படையினர் நீடிப்பதற்கு வழிவகுக்கும் வகையில் இருதரப்பு ஒப்பந்தத்தில் விரைவாகக் கையெழுத்திடுமாறு ஆப்கன் அரசை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. எனினும், ஆப்கனில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலுக்குப் பிறகே இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும் என்று அந்நாட்டு அரசு கூறுகிறது. இதனால், அமெரிக்கா - ஆப்கன் இடையிலான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment