12.12.13

ஓரினச் சேர்க்கை சட்டப்படி குற்றம்: உச்ச நீதிமன்றம்


இந்திய தண்டனைச் சட்டத்தின்படி ஓரினச் சேர்க்கை குற்றமாகும் என்றும், அதற்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
""இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 377-வது படி ஓரினச் சேர்க்கை குற்றமாகும். சட்டத்தில் அந்தப் பிரிவு உள்ளவரை ஓரினச் சேர்க்கையை குற்றமல்ல என்று நீதிமன்றம் கூற முடியாது.
சட்டப் பிரிவை நீக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உண்டு. இது குறித்து நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்'' என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
"ஓரினச் சேர்க்கை குற்றமல்ல' என்று 2009ஆம் ஆண்டு தில்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் மேற்கண்டவாறு தீர்ப்பளித்தது.
முன்னதாக, தில்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு நாட்டின் பாரம்பரியத்துக்கும், மத கோட்பாடுகளுக்கும் எதிரானது என தொண்டு நிறுவனங்கள், மத அமைப்புகள், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் உள்பட ஏராளமான அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தன.
அவற்றை விசாரித்த நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, எஸ். ஜே. முகோபாத்யாய ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தனர்.
மறுபரிசீலனை: தீர்ப்பு வெளியானதை முன்னிட்டு, நீதிமன்ற வளாகத்தில் ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்கள் கூடியிருந்தனர். இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய முறையிடப் போவதாக அவர்கள் தெரிவித்தனர்.
25 லட்சம் ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்கள்: இந்த வழக்கின் விசாரணையின் போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தாக்கல் செய்திருந்த மனுவில், "நாடு முழுவதும் சுமார் 25 லட்சம் ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்கள் உள்ளனர். அதில், சுமார் 1.75 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 4 லட்சம் பேரை எய்ட்ஸ் விழிப்புணர்வு திட்டங்களில் ஈடுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதுவரை 2 லட்சம் பேர் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்' என்று கூறியிருந்தது.

No comments:

Post a Comment