12.12.13

பன்னா இஸ்மாயில் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்: சேலம் சிறையில் அடைப்பு

ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு காவல்துறை வசம் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டிருந்த பன்னா இஸ்மாயில், புதன்கிழமை திடீரென நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பாஜக மாநிலச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் பிலால் மாலிக், போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில் ஆகியோர் எதிரிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிலால் மாலிக், போலீஸ் பக்ருதீன் ஆகியோரிடம் ஏற்கெனவே சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தியுள்ளனர். இதையடுத்து இந்த வழக்கில் பன்னா இஸ்மாயில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
வேலூர் சிறையில் மற்றொரு வழக்கில் அடைக்கப்பட்டிருந்த அவரை சேலம் சி.பி.சி.ஐ.டி. போலீஸôர், கைது செய்து சேலம் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தினர். ஆடிட்டர் ரமேஷ் கொலை குறித்து விசாரிப்பதற்காக பன்னா இஸ்மாயிலை 5 நாள்களுக்கு போலீஸ் காவலில் வைத்து விசாரணைக்குள்படுத்த அனுமதி வழங்கும்படி சி.பி.சி.ஐ.டி தரப்பில் கோரப்பட்டது.இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, பன்னா இஸ்மாயிலை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். இதையடுத்து 13-ம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் அவரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி நீதிபதி கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து சூரமங்கலத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்பட்ட பன்னா இஸ்மாயில், புதன்கிழமை காலை ஆடிட்டர் ரமேஷ் கொலையுண்ட இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. 13-ம் தேதி வரையிலும் பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு அவர் உட்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதன்கிழமை பிற்பகலில் திடீரென அவர் சேலம் 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
நீதிபதி விஜயலட்சுமி முன்பு அவரை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் ஆஜர்படுத்தினர். தங்களது விசாரணை முடிந்துவிட்டதால் அவரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எதிரி தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஜாகீர் அஹமது, வேலூர் சிறைக்கு வாகனத்தில் அழைத்துச் செல்லும் நிலையில் பன்னா இஸ்மாயிலின் உடல் நிலை இல்லை என்று வாதிட்டார்.
இதையடுத்து பன்னா இஸ்மாயிலை வரும் 20-ம் தேதி வரையிலும் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்ட நீதிபதி விஜயலட்சுமி, அவரை மீண்டும் 20-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும், சிறையில் வைத்து அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார். போலீஸ் காவலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பன்னா இஸ்மாயிலுக்கு திடீரென உடல் நலம் குன்றியதாலேயே அவரை போலீஸார் அவசர அவசரமாக நீதிமன்றத்துக்கு அழைத்து வந்து மீண்டும் ஆஜர்படுத்திவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment