9.12.13

வலுவிழக்கிறது "மாதி' புயல்


வங்கக் கடலில் உருவாகியுள்ள "மாதி' புயல் வலுவிழந்து வருவதாக என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது: மாதி புயல் இப்போது சென்னையில் இருந்து தென்கிழக்கே 490 கி.மீ. தூரத்தில் உள்ள நிலையில் திடீரென வலுவிழக்கத் தொடங்கி உள்ளது. இது திங்கள்கிழமை தென்மேற்கு திசையை நோக்கி நகர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக மாதி புயல் மேலும் வலுவிழக்கலாம் என வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் தமிழகம், புதுவை, ஆந்திர கடலோர மாவட்டங்களில் மேலும் ஓரிரு நாள்களுக்கு மழை தொடரும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுவை கடற்பகுதியில் மணிக்கு 45 - 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இதனால் தமிழகம் மற்றும் புதுவை கடல்பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்குள் செல்ல வேண்டும் எனவும் ஆழ்கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
வானிலை முன்னறிவிப்பு: சென்னையைப் பொருத்தவரையில் வானம் பொதுவாக மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யும். தரைக்காற்று பலமாக வீசும் இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேர நிலவரப்படி எண்ணூரில் 30 மி.மீ. மழையும், சென்னை நுங்கம்பாக்கத்தில் 20 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. மகாபலிபுரம், சென்னை விமான நிலையம், செங்குன்றம் ஆகிய பகுதிகளில் 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

No comments:

Post a Comment