9.12.13

திண்டுக்கல்லில் தலித்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை: மார்க்சிஸ்ட்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே நடுப்பட்டியில் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா காரியாம்பட்டி அருகே உள்ள நடுப்பட்டியில் தலித் அருந்ததிய மக்கள் மீது ஜாதிய சக்திகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் பலர் படுகாயமடைந்துள்ளனர். பல வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. பல வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியவை சார்பில் திண்டுக்கல்லில் கடந்த 5-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாதிக்கப்பட்ட நடுப்பட்டி கிராமத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் தொகுதி எம்.எல்.ஏ.வான கே. பாலபாரதி நேரில் சென்று தலித் மக்களுக்கு ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஜாதிய சக்திகள், பாலபாரதி மீது அவதூறாக போஸ்டர் வெளியிட்டுள்ளனர். பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் சீண்டல்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சியும், பாலபாரதியும் துணைபோவதாக பாமகவினர் கூறி வருகின்றனர். இது அப்பட்டமான அவதூறு பிரசாரமாகும்.
தலித்கள் மீதான தாக்குதலை நியாயப்படுத்த அவர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவதாக போலீஸில் பொய்யான புகார் கொடுத்து இத்தகையை பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு இப்பிரச்னையில் தலையிட்டு தலித்கள் மீது தாக்குதல் நடத்திய ஜாதிய சக்திகள் மீது வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அனைத்து ஜனநாயக சக்திகளும் தலித்களுக்கு எதிரான இத்தகைய தாக்குதலுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் என ஜி. ராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment