7.12.13

சென்னை ஐ.டி. நிறுவனங்களில் பாதுகாப்பு: ஜனவரி 15க்குள் மேம்படுத்த போலீஸ் கெடு

சென்னையில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) நிறுவனங்களில் பாதுகாப்பை ஜனவரி 15க்குள் மேம்படுத்துமாறு பெருநகர காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
சென்னையில் சுமார் 120 தனியார் ஐ.டி. நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றில் சுமார் 2 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். மும்பை,பெங்களூர்,தில்லி போன்ற பெருநகரங்களில் ஐ.டி. நிறுவனங்களை மையமாக வைத்து குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை பெருநகர காவல்துறை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஐ.டி. நிறுவனங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு ஆணையர் எஸ்.ஜார்ஜ், கூடுதல் ஆணையர் பி.தாமரைக்கண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் ஐ.டி. நிறுவனங்களைச் சேர்ந்த 120 நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ஐ.டி. நிறுவனங்களின் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா கட்டாயம் பொருத்தப்பட வேண்டும், பாதுகாப்புக்கு நியமிக்கப்படும் தனியார் செக்யூரிட்டி நிறுவனங்களின் பாதுகாவலர்கள் காவல்துறையின் தடையில்லா சான்றிதழ் வைத்திருக்கின்றனரா என சரிபார்க்க வேண்டும், பணியாளர்களின் வாகனங்களில் உள்ள டிரைவர்களும் தடையில்லா சான்றிதழ் பெற்றுள்ளனரா என பார்க்க வேண்டும், இரவு நேரத்தில் பெண் ஊழியர்களை அழைத்துச் செல்லும் வாகனங்களில் கட்டாயம் பாதுகாவலர்கள் உடன் செல்ல வேண்டும் என காவல்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஜனவரி 15-ம் தேதிக்குள் செய்ய வேண்டும் எனவும் காவல்துறை சார்பில் கூறப்பட்டது.

No comments:

Post a Comment