7.12.13

டிச. 20 இல் இந்திய பொறியாளர் கழக மாநாடு

இந்திய பொறியாளர் கழக மாநாடு சென்னையில் டிசம்பர் 20-ம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற உள்ளன.
இந்த மாநாட்டை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தொடங்கி வைக்க உள்ளார்.
இதுகுறித்து, இந்திய பொறியாளர் கழக தமிழக மையத் தலைவர் டி.எம். குணாராஜா சென்னையில் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
இந்திய பொறியாளர் கழகம் சார்பில் ஏ.எம்.ஐ.இ. என்ற நான்கு ஆண்டு படிப்பு பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. இதில், பிளஸ்-2 முடித்த மாணவர்கள் சேர முடியும்.
இதுதவிர, பொறியியல் ஆராய்ச்சிகள், மாநாடுகள் என பல்வேறு பொறியியல் துறை சார்ந்த நடவடிக்கைகளை இந்த கழகம் மேற்கொண்டு வருகிறது.
இந்த கழகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மாநாடு நடத்தப்படுகிறது. இதுபோல் 2013-ம் ஆண்டுக்கான மாநாடு டிசம்பர் 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை சென்னையில் நடத்தப்பட உள்ளது.
குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்கும் இந்த மாநாட்டில் தமிழக ஆளுநர், முதல்வர், தொழில் துறை அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
மாநாட்டின் ஒரு பகுதியாக தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு, பாதுகாப்பு மற்றும் தர அமைப்பு, தண்ணீர் மேலாண்மை அமைப்பு, கிராமப்புற மேம்பாட்டு அமைப்பு, நீடித்த மேம்பாட்டு அமைப்பு என்பன உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளில் இயங்கி வரும் அமைப்புகள் சென்னையில் புதிதாக தொடங்கப்பட உள்ளன.
மாநாட்டில் சிறந்த பொறியியல் தொழில் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படும். பொறியியல் மாணவர்களிடையே ஆராய்ச்சி செயல்திட்டப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment