7.12.13

நெல்சன் மண்டேலா மறைந்தார்



தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக் கொடுமைக்கு முடிவு கட்டியவரும், அந்நாட்டில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கருப்பின அதிபருமான நெல்சன் மண்டேலா, உடல் நலக்குறைவால் ஹவுட்டன் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வியாழக்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 95.
மண்டேலா மறைவுக்கு ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், பிரிட்டன் பிரதமர் டேவிட் காமரூன் உள்ளிட்ட சர்வதேசத் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நுரையீரல் பாதிப்பு காரணமாக, சில காலமாக தீவிர மருத்துவச் சிகிச்சை பெற்று வந்த மண்டேலா கடந்த செப்டம்பர் மாதம் வீட்டிற்குத் திரும்பினார். வீட்டில் இருந்தபடியே மருத்துவச் சிகிச்சை பெற்று வந்த மண்டேலா வியாழக்கிழமை இரவு காலமானார்.
அவரது மறைவை தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா, அரசுத் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு அறிவித்தார். மண்டேலாவின் உடல் அடக்கம் செய்யப்படும்வரை அந்நாட்டுக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் ஜேக்கப் ஜூமா அறிவித்துள்ளார்.
முன்னாள் அதிபர் மண்டேலாவின் உடல் மீது தென் ஆப்பிரிக்க நாட்டின் தேசியக் கொடி போர்த்தப்பட்டு, அரசு மரியாதையுடன் ராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த நாட்டின் தலைநகரம் பிரிட்டோரியாவில் உள்ள அரசுக் கட்டடத்தில் மண்டேலாவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 15ஆம் தேதி அரசு மரியாதையுடன் கிழக்கு கேப் மாகாணத்தில் உள்ள க்யுனு பகுதியில் மண்டேலாவின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் தென் ஆப்பிரிக்க அரசு அறிவித்துள்ளது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு நாட்டுத் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காந்திஜியின் கொள்கைகளைப் பின்பற்றி வந்த மன்டேலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசும், இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா உள்பட ஏராளமான உயரிய விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.
மண்டேலாவின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் 5 நிமிடங்களுக்கு ஜோஹன்னல்பர்க்க பங்குச் சந்தையின் அனைத்து வர்த்தகமும் நிறுத்தி வைக்கப்பட்டது.

நிறவெறிக்கு எதிரான மண்டேலாவின் பாதை

நெல்சன் மண்டேலாவின் இயற்பெயர் ரோலிலாலா தலிபுங்கா மண்டேலா. 1918ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க கிழக்கு பகுதியில் உள்ள சிறிய கிராமத்தில் "திம்பு' இனத்தில் பிறந்தார். "மடிபா' என்று செல்லமாக அழைக்கப்பட்டு வந்த அவருக்கு பள்ளி ஆசிரியர் "நெல்சன்' என்ற பெயரைச் சூட்டினார்.
தனது 23வது வயதில் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை விரும்பமில்லாமல் ஜோஹன்னஸ்பர்க்குக்கு 1941ஆம் ஆண்டு வந்தார். அங்கு சட்டம் படித்த நேரத்தில் வெள்ளை நிற மக்களின் நிறவெறி பாரபட்சத்தால் பாதிக்கப்பட்ட மண்டேலா, நிறவெறியை ஒடுக்கும் நோக்கில்,ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, அந்தக் கட்சியின் இளைஞர் பிரிவைத் தொடங்கினார். குத்துச் சண்டை வீரராகவும் திகழ்ந்தார்.
வழக்குரைஞராக தேர்ச்சி பெற்ற மண்டேலா, 1952ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க வரலாற்றிலேயே கருப்பு இன மக்களுக்கான முதல் சட்ட மையத்தை அமைத்தார். 1956ஆம் ஆண்டு தேசத் துரோக வழக்கு மண்டேலா மீது சுமத்தப்பட்டு பின்னர் 4 ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டார்.
நிறவெறிக் கொள்கையைக் கடுமையாக்கும் வகையில் கருப்பின மக்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டத்தை மண்டேலா அஹிம்சை வழியில் எதிர்த்தார். 1960ஆம் ஆண்டு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இளைஞர் பிரிவுக்கு அந்நாட்டு அரசு தடைவிதித்தது. இதையடுத்து மண்டேலா தலைமறைவானார். பின்னர் போராட்டம் வன்முறைப் பாதைக்குத் திரும்பிய நிலையில் மண்டேலா கைது செய்யப்பட்டார். சிறை வாழ்க்கையின் போதும், நீதிமன்ற வாதங்களின் போதும் தென் ஆப்பிரிக்க கருப்பின மக்களின் விடுதலைக்காக மண்டேலா முன்வைத்த கருத்துகள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தன.
இதன் காரணமாக 1990ஆம் ஆண்டு விடுதலையான நெல்சன் மண்டேலா அடுத்த மூன்று ஆண்டுகளில் தென்ஆப்பிரிக்காவில் அனைத்து தரப்பினராலும் வாக்களித்து உருவாக்கப்பட்ட ஜனநாயக அரசின் முதல் அதிபர் என்ற பெருமையையும் பெற்றார்.

No comments:

Post a Comment