7.12.13

மதக் கலவர மசோதாவை எதிர்க்க முதல்வர்களுக்கு கோரிக்கை



மதக் கலவரத் தடுப்பு மசோதாவை எதிர்க்குமாறு அனைத்து மாநில முதல்வர்களையும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுக்கு மோடி வெள்ளிக்கிழமை கடிதம் எழுதினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடுவது மற்றும் அத்துமீறி குறுக்கிடும் மத்திய அரசின் முயற்சியே மதக் கலவரத் தடுப்பு மசோதாவாகும். இதை எதிர்க்க அனைத்து மாநில முதல்வர்களும் அரசியல் எல்லைகளைக் கடந்து முன்வர வேண்டும். இந்த மசோதா நம் சமூகத்தையே பிளவுபடுத்திவிடும் என்பதுடன் குடிமக்களின் மதம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் குற்றவியல் சட்ட நடைமுறைகளைப் பாகுபடுத்துவது என்ற மோசமான சிந்தனையை இந்த மசோதா அறிமுகப்படுத்தும்.
மேலும், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை மனரீதியாக நிலைகுலையச் செய்வதோடு, எதிர்காலத்தில் சட்டம் ஒழுங்கு சூழ்நிலையை மாநில அரசுகள் எவ்வாறு கையாள வேண்டும் என்பதிலும் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று தன் கடிதத்தில் மோடி தெரிவித்துள்ளார்.
மசோதாவின் அம்சங்கள்: இதனிடையே, மதக் கலவரத் தடுப்பு மசோதாவில், மதக் கலவரத்தில் ஈடுபடுவோருக்கு கடுங்காவல் சிறைத் தண்டனை, மதரீதியாக வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசுபவர்களுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை, வழக்கு விசாரணைகள் சம்பந்தப்பட்ட மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்துக்கு மாற்றப்படுவது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment