21.12.13

ஒரே நாளில் ரூ.32 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல்: 3 பேர் கைது 4 மாதங்களில் 17 கிலோ தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாக ஒரே நாளில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோலாலம்பூரிலிருந்து வியாழக்கிழமை திருச்சி வந்த விமானத்தில் பயணித்த பயணிகளை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஹேர் டிரிம்மரில் உள்ள பேட்டரிகளை அகற்றி விட்டு தலா 100 கிராம் கொண்ட 3 தங்கக்கட்டிகளைக் கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதைத் கடத்தி வந்தவர் சிவகங்கை மாவட்டம்,  இளையான்குடியைச் சேர்ந்த சகாயவிஜியை (33) எனத் தெரிய வந்தது.
இதுபோல, கொழும்புவிலிருந்து திருச்சி வந்த சிறிலங்கன் ஏர்லைன்ஸில் பயணம் செய்த பயணிகளை  நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்ட போது, பர்தா அணிந்து வந்த பெண் ஒருவர் ஸ்கேனரை வேகமாக கடக்க முயன்றார்.
அப்போது ஸ்கேனரிலிருந்து சப்தம் வந்ததைத் தொடர்ந்து அப்பெண்ணை சோதனையிட்ட போது  அவர் 430 கிராம் தங்கச்சங்கிலியை அணிந்திருந்தார்.
அந்த சங்கிலி பணி முழுமை பெறாமல் இருந்ததும், அவர் இலங்கையைச் சேர்ந்த சிதி வசீரா (48) என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த ஒருவர், எமர்ஜென்சி விளக்கில் பேட்டரியை மாற்றிவிட்டு, அதில் 300 கிராம் தங்கக்கட்டியைக் கடத்தி வந்ததும், அவர் மதுரையைச் சேர்ந்த  ஜெய்கணேஷ் (33) என்பதும் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து சகாயவிஜி, சிதி வசீரா,ஜெய்கணேஷ் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.
4 மாதங்களில் 17 கிலோ பறிமுதல்: கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கடந்த 4 மாதங்களில் மட்டும்
17 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்ட போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், சிங்கப்பூர், கொழும்பு போன்ற நகரங்களிலிருந்து வருபவர்கள்தான் இச்சோதனையில்சிக்கியுள்ளனர் என்றும் குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment