21.12.13

ராம ராஜ்யத்தை ஏற்படுத்த வேண்டும்: நரேந்திர மோடி



நாட்டில் ராம ராஜ்யத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும், அதற்கு மக்களைவைத் தேர்தலில் சரியான கட்சியைத் தேர்வு செய்ய உத்தரப் பிரதேச மக்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை வேண்டுகோள் விடுத்தார்.
உத்தரபிரதேச மாநிலம் வாராணசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
மத்தியில் சரியான அரசை அமையாததற்கு உத்தரப் பிரதேச மக்களின் பங்களிப்பில்
ஏற்பட்ட குறைதான் காரணம். (நாட்டிலேயே அதிகமாக 80 மக்களவை தொகுதிகளை கொண்ட மாநிலம் உத்தரப் பிரதேசம் என்பதை கருத்தில் கொண்டு அவர் இவ்வாறு தெரிவித்தார்).
நீங்கள் ஒருநாள் சரியான அரசை தேர்வு செய்வீர்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அப்படி தேர்வு செய்வீர்கள் என்றால், அன்றுதான் ராம ராஜ்யம் நடைமுறைக்கு வரும்.
பிரதமர் விளக்கமளிக்க வேண்டும்: வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், ஊழல்களுக்கு காங்கிரஸ் கட்சியும், நேரு- காந்தி குடும்பமும்தான் காரணம். சில அரசியல் கட்சியினர் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருவதாக பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
அதுபோன்ற வெற்று வாக்குறுதிகள் எதனையும் பாஜக அளிக்கவில்லை. மக்களுக்காக நிறைவேற்றப்போகும் திட்டங்களைத்தான் பாஜக தெரிவித்து வருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சிதான் அதுபோன்ற பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகிறது. வாக்குறுதி அளித்த திட்டத்திற்காக பெருந்தொகையை செலவிட்ட பிறகும், அதனை செயல்படுத்த முடியாமல் அக்கட்சி தோல்வி அடைந்து வருகிறது.
உதாரணமாக, கங்கை நதியை சுத்தப்படுத்தும் பணிக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிடப்பட்டது. ஆனால் இன்னும் கங்கை நதி, மாசுபட்டதாகத்தான் காணப்படுகிறது.
கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டத்துக்காக எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டது என்பது குறித்து பிரதமர் விளக்க வேண்டும்.
தேர்தல் நெருங்கி வருவதாலேயே ஏழைகள் குறித்து காங்கிரஸ் கட்சி பேசி வருகிறது. ஏழைகளின் துன்பத்தை அக்கட்சி உணர்ந்திருந்தால், கடந்த 45 ஆண்டுகால குடும்ப ஆட்சியில் நாட்டில் ஏழைகளே இருந்திருக்க மாட்டார்கள்.
டீ விற்றவர் நாட்டின் பிரதமராக முடியாது என்று காங்கிரஸ் கட்சியினர் தெரிவிக்கின்றனர். நாட்டு மக்கள் விரும்பினால், நெசவாளி, விவசாய தொழிலாளி, செருப்பு தைக்கும் தொழிலாளி கூட நாட்டின் பிரதமராக முடியும் என்று மோடி கூறினார்.

No comments:

Post a Comment