21.12.13

சுமுகத் தீர்வு ஏற்படும்: இந்தியா நம்பிக்கை



இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே கைது விவகாரத்தில் இந்தியா தனது கடுமையான நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது. அதாவது இவ்விஷயத்தில் சுமுகத் தீர்வு ஏற்பட வேண்டும் என்பதே விருப்பம் என்றாலும் அமெரிக்காவுடனான நெருங்கிய உறவை கட்டிக்காப்பது முக்கியம் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
தேவயானி விவகாரத்தில் மன்னிப்புக் கேட்கும் பேச்சுக்கே இடமில்லை; அவர் மீதான வழக்கை வாபஸ் பெறும் எண்ணமும் இல்லை என்று அமெரிக்கா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள நிலையில் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறுகையில், தேவயானி விவகாரத்தில் சுமுகத் தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. தேவையானிக்கு ஏற்பட்ட அவமரியாதை எங்களை உறுத்திக்கொண்டிருக்கிறது. அவரை அமெரிக்கா நடத்திய விதம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுதான் உண்மை நிலை என்றாலும் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள உறவு ஆழமானது. அதைப் பேணி பாதுகாக்க வேண்டியது எங்களது கடமையாகும்.
நியூயார்க்கில் பணியாற்றி வரும் இந்தியத் தூதரக அதிகாரிக்கு மதிப்பும், கௌரவமும் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த மத்திய அரசு எல்லா நடவடிக்கையும் எடுக்கும். ராஜதந்திர விவகாரங்களில் சில நடவடிக்கைகள் பொதுப்படையாகவும், சில மறைமுகமாகவும் கடைப்பிடிக்கப்படுகின்றன. அமெரிக்காவும், இந்தியாவும் பரஸ்பரம் அரசு அளவில் மட்டும் அல்லாது, இரு நாடுகளிலும் தனியார் முதலீடுகள், தனி நபர்களின் முதலீடுகள் என படர்ந்து உள்ளன. இதை நாம் உணர்வது போல அமெரிக்காவும் நன்கு உணர்ந்துள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் விரைவில் நல்ல தீர்வுக்கு வழி ஏற்படும் என்று நம்புகிறேன் என்றார் சல்மான் குர்ஷித்.
இந் நிலையில் இச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கமல் நாத், "இந்திய துணைத் தூதரைக் கைது செய்தது மட்டுமன்றி அவரது ஆடைகளைக் களைந்து நடத்திய சோதனை நடவடிக்கையை ஏற்க முடியாது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா முழுமையான மன்னிப்பைத் தெரிவிக்க வேண்டும். அதற்கு குறைவான எந்தச் செயலையும் ஏற்க முடியாது' என்றார்.
அமெரிக்க தூதர் விளக்கம்: தேவயானி கைது நடவடிக்கை தொடர்பாக தில்லியில் உள்ள அமெரிக்க தூதர் நான்சி பாவெல் வெளியுறவுத் துறைச் செயலர் சுஜாதா சிங்கை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து விளக்கினார். சுமார் 25 நிமிடங்கள் நடைபெற்ற இச் சந்திப்பின் போது, தேவயானி மீதான வழக்கை முழுûமாக ரத்து செய்ய வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை சுஜாதா சிங் தெளிவுபடுத்தினார்.
முன்னதாக, அமெரிக்க வெளியுறவுத் துறை உயரதிகாரி வெண்டி ஷெர்மென் தேசியப் பாதுகாப்பு செயலர் சிவசங்கர் மேனனை வெள்ளிக்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு "நீடித்து வரும் இப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்' என்று கூறினார். அதைத் தொடர்ந்தே நான்சி பாவெலை சுஜாதா சிங் சந்திக்க ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது.
"அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கு இந்திய விமான நிலையங்களில் செல்ல வழங்கப்பட்டு வந்த விசேஷ சலுகை வியாழக்கிழமை நள்ளிரவு முதல் பறிக்கப்பட்டது. எனவே, அது குறித்தும் நான்சி பாவெல் சுஜாதா சிங்கியிடம் பேசியிருக்கலாம்' என்று வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment