21.12.13

ஆதர்ஷ் விசாரணை அறிக்கை நிராகரிப்பு: 3 முன்னாள் முதல்வர்கள் மீது குற்றச்சாட்டு



ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு முறைகேட்டில் மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தற்போதைய மத்திய உள்துறை அமைச்சருமான சுஷில்குமார் ஷிண்டே, அசோக் சவான், மறைந்த முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் ஆகியோர் விதிமுறைகளை மீறியுள்ளனர் என்று நீதிபதி ஜே.ஏ. பாட்டீல் தலைமையிலான விசாரணை ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மாநில அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கையை மகாராஷ்டிர அமைச்சரவை வெள்ளிக்கிழமை நிராகரித்தது.
இதற்கான காரணத்தை தெரிவிக்க மாநில முதல்வர் பிரித்விராஜ் சவான் மறுத்துவிட்டார்.
எனினும், மும்பை உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், வெள்ளிக்கிழமை முடிந்த மகாராஷ்டிர சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடரில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணை அறிக்கை நிராகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
ஆதர்ஷ் முறைகேட்டில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் அசோக் சவான் உள்பட முக்கிய நபர்களைப் பாதுகாப்பதற்காக காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸýம் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பாஜக, சிவசேனை உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
அறிக்கையின் விவரம்: மொத்தமுள்ள 102 குடியிருப்பு வாசிகளில் 25 பேர் வீடுகள் பெறுவதற்கு தகுதியற்றவர்கள்.
அதில், மகாராஷ்டிர சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பாபாசாஹிப் குபிகர் (தேசியவாத காங்கிரஸ்), சிவசேனா கட்சியின் எம்பி சுரேஷ் பிரபு, அசோக் சவானின் மூன்று உறவினர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 22 பேர் பினாமி பெயரில் வீடுகளை பெற்றுள்ளனர். ஆதர்ஷ் குடியிருப்புகள் கட்டப்பட்ட இடம் மாநில அரசுக்கு சொந்தமானது. கார்கில் போரில் உயிரிழந்தவர்களுக்காக இந்த இடம் ஒதுக்கப்படவில்லை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னணி: மும்பையில் உள்ள கொலாபா பகுதியில் 31 அடுக்குமாடிகளைக் கொண்ட ஆதர்ஷ் குடியிருப்பு அமைந்துள்ளது. ராணுவத்தில் உயிர் நீத்தவர்களின் குடும்பத்தினருக்காக கட்டப்பட்ட இந்த குடியிருப்புகளில் அரசியல்வாதிகளும், அரசு உயரதிகாரிகளும், ராணுவ உயரதிகாரிகளும் விதிமுறைகளை மீறி வீடுகளைப் பெற்றதாக புகார் எழுந்தது. இதை விசாரித்த சிபிஐ முன்னாள் முதல்வர் அசோக் சவான் உள்பட 13 பேர் மீது குற்றம்சாட்டியது.
முறைகேடாக வீடு பெற்றோர் பட்டியலில் தேவயானி?
ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பில் அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடேவும் முறைகேடாக வீடு பெற்றுள்ளார் என்று நீதி விசாரணை ஆணையம் குற்றம்சாட்டியுள்ளதாக தெரிகிறது.
ஆதர்ஷ் முறைகேடு தொடர்பாக மாநில அரசிடம் ஓய்வு பெற்ற நீதிபதி ஜே.ஏ. பாட்டீல் தலைமையிலான விசாரணை ஆணையம் அறிக்கை வழங்கியுள்ளது.
ஆதர்ஷ் குடியிருப்பில் விதிமுறைகளை மீறி முக்கிய நபர்கள் 25 பேர் முறைகேடாக வீடுகளைப் பெற்றனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தப் பட்டியலில், தற்போது சர்சையில் சிக்கியுள்ள துணை தூதர் தேவையானின் பெயரும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
குற்றம்சாட்டப்பட்டுள்ள 25 பேரில் 22 பேர், வீடுகளைப் பெற தங்கள் உறவினர்களின் பெயரிலும், பினாமி பெயரிலும் பணப்பரிமாற்றம் செய்துள்ளனர் என்று விசாரணை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment