14.12.13

பெட்ரோல் குண்டு வீச்சு:மாணவர் சரண் 4 பேருக்கு போலீஸ் காவல்

நீதிமன்றத்தில் ஆஜராகி திரும்பியவர்கள் மீதான பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் தொடர்பாக பாலிடெக்னிக் மாணவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே சரணடைந்த 4 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்தது.
     மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த முத்துவிஜயன் உள்ளிட்ட சிலர் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு திரும்பும் போது, தெப்பக்குளம் பகுதியில் ஒரு கும்பல் பெட்ரோல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. இதில் முத்துவிஜயன் இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார், ஆசைத்தம்பி உள்ளிட்ட 7 பேர் சரணடைந்தனர். 
   இச்சம்பவம் தொடர்பாக அனுப்பானடியைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் பிரேம்குமார் (17) மதுரை சிறுவர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் (பொறுப்பு) பால்பாண்டி முன்பு வெள்ளிக்கிழமை சரணடைந்தார். அவரை வரும் 27-ம் தேதிவரையில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
    இதற்கிடையே, ஸ்ரீவில்லிபுத்தூóர் நீதிமன்றத்தில் சரணடைந்த 7 பேரும் வழக்கு விசாரணை நடைபெறும் முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்த ப்பட்டனர். இவர்களின் நீதிமன்ற காவலை வரும் 20-ம் தேதி வரையில் நீட்டித்து மாஜிஸ்திரேட் ரவி உத்தரவிட்டார். இவர்களில் முத்துக்குமார்,ஆசைத்தம்பி, அருண்குமார், குமரன் ஆகியோரை விசாரிக்க அனுமதி கோரி தெப்பக்குளம் போலீஸார் மனுத் தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ரவி, 4 பேரையும் 5 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.

No comments:

Post a Comment