14.12.13

ராமேசுவரம் அருகே தரையில் விழுந்து நொறுங்கியது ஆள் இல்லா உளவு விமானம்


தென்னை மரங்களுக்கு இடையே விழுந்து நொறுங்கிக் கிடக்கும் விமானத்தின் பாகம்.

இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஆள் இல்லாத உளவு விமானம் ராமேசுவரம் அருகே உசிலங்காட்டு வலசை என்ற கிராமத்தில் விழுந்து நொறுங்கியது.
ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளியில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். பருந்து என்ற பெயருடைய விமான தளம் உள்ளது.
உச்சிப்புளியில் உள்ள கடற்படை விமான தளத்திலிருந்து கொண்டே இந்த விமானத்தை ஆள் இல்லாமலேயே இயக்க முடியும். கடந்த ஓராண்டாக கடற்கரையோரங்களில் உளவு பார்க்கும் பணியில் ஈடுபட்டுவந்த இந்த விமானம், வழக்கம்போல வெள்ளிக்கிழமையும் ஈடுபட்டு வந்தபோது, ராமேசுவரம் அருகே உசிலங்காட்டு வலசை என்ற கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பில் திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது.
விமானம் தரையில் விழும்போது, அந்த இடத்துக்கு மிக அருகில் உள்ள கிணறு ஒன்றில் தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்த மூதாட்டி காளியம்மாள் (81) என்பவர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார்.
சம்பவ இடத்துக்கு இந்திய கடற்படை விமான தளத்தின் வீரர்கள் வந்து விமானத்தின் உதிரிப் பாகங்களை எடுத்து லாரியில் ஏற்றிச் சென்றனர். சம்பவ இடத்தில் ராமேசுவரம் டி.எஸ்.பி. விஜயகுமார் தலைமையில் உச்சிப்புளி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் உள்ளிட்ட போலீஸாரும் விசாரணை மேற்கொண்டனர்.
சம்பவம் தொடர்பாக ஐ.என்.எஸ். பருந்து இந்திய கடற்படை விமான தளத்தின் கமாண்டர் அபிஜித்பர் கட்டாகி தெரிவித்ததாவது:
வழக்கம்போல பிற்பகல் உளவுப் பணியை ஒரு மணி நேரம் வரை முடித்து விட்டு திரும்பி விமான தளத்துக்கு வந்து கொண்டிருக்கும்போதுதான் விபத்துக்குள்ளாகி நொறுங்கியிருக்கிறது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத்தான் விழுந்திருக்கலாம் எனத் தெரிய வருகிறது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டே பிறகே முழு விவரங்களும் தெரியவரும் என்றார்.

No comments:

Post a Comment