14.12.13

நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதில் பின்னடைவு

தெலங்கானா எதிர்ப்பு, பாலியல் புகாருக்கு ஆளான முன்னாள் நீதிபதி ஏ.கே. கங்குலி பதவி விலக வேண்டும், தமிழக மீனவர் பிரச்னை உள்ளிட்ட விவகாரங்களை மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெள்ளிக்கிழமை எழுப்பின. இதனால் காலை 11 மணிக்குத் தொடங்கிய மக்களவை அலுவல், பகல் 1 மணிக்குள்ளாக மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவை அதன் தலைவர் மீரா குமார் தலைமையில் கூடியதும், 2001-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக சில நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கேள்வி நேரம் ரத்து: அதைத் தொடர்ந்து கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கங்குலி மீதான பாலியல் புகார் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்ப மீரா குமார் அனுமதி அளித்தார். பிறகு, ஆந்திரத்தைச் சேர்ந்த ஒரு பிரிவு காங்கிரஸ் உறுப்பினர்கள், தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து தெலங்கானா விவகாரத்தை எழுப்பினர்.
தமிழக மீனவர் விவகாரம்: மக்களவை அதிமுக தலைவர் தம்பிதுரை தலைமையில் அக்கட்சி உறுப்பினர்கள் தமிழக மீனவர்கள் கைது தொடர்பான பிரச்னையை எழுப்பினர். அவர்களை நண்பகல் 12 மணிக்கு பிறகு பேச அனுமதிக்கிறேன் என்று மீரா குமார் கூறினார். இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் அமைதியடைந்தனர். இருப்பினும் தெலங்கானா விவகாரத்தை ஆந்திர உறுப்பினர்கள் எழுப்பியதால் மக்களவை நடவடிக்கையை மீரா குமார் ஒத்திவைத்தார்.
மீண்டும் தொடர் அமளி: பின்னர் அவை கூடியபோதும் தொடர்ந்த அமளியால் திங்கள்கிழமை காலைவரை மக்களவை அலுவலை மீரா குமார் ஒத்திவைத்தார்.
இதனால், தொடர்ந்து நான்காம் நாளாக மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அவையில் கொண்டு வர இயலாத நிலை ஏற்பட்டது.

No comments:

Post a Comment