14.12.13

மும்முனைப் போட்டியா நான்கு முனைப் போட்டியா?


மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி அமைப்பதில் எந்த முடிவும் எடுக்க முடியாமல் சிக்குக் கோலத்தில் மாட்டிக் கொண்ட புள்ளிகளாக தமிழக அரசியல் கட்சிகள் தவித்து வந்தன. தற்போது அந்தக் சிக்கல் ஓரளவு குறைந்துள்ளது. நண்பன் யார் விரோதி யார் என்று நெருங்கிச் சென்று பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இருந்தே அதிமுக தெளிவான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அறிவித்து, டிசம்பர் 19-ஆம் தேதி முதல் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களையும் அதிமுக பெற உள்ளது.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை என்ற நிலையில், காங்கிரஸில் இருந்து தமாகாவை ஜி.கே.வாசன் பிரிக்க உள்ளார். அந்தக் கட்சியோடு அதிமுக கூட்டணி அமைக்கும் என்று பேசப்பட்டது. ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்ற நிலையே தற்போது ஏற்பட்டிருக்கிறது.
தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கான நிர்வாகிகள் அண்மையில் அறிவிக்கப்பட்டனர். இதில் ஜி.கே.வாசனின் ஆதரவாளர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தமாகா என்னும் முடிவுக்கு வாசன் வந்துவிடக் கூடாது என்கிற கவனத்துடனேயே காங்கிரஸ் மேலிடமும் நிர்வாகிகள் பட்டியலுக்கு அனுமதி வழங்கியுள்ளது என்று கூறப்படுகிறது.
4 மாநிலத் தேர்தல் தோல்விக்குப் பிறகு காங்கிரûஸ எந்த வடிவத்திலும் இணைத்துக் கொள்வதற்குத் தமிழகக் கட்சிகள் தயாராக இல்லை என்ற நிலையே தொடர்கிறது.
திமுக தனது எல்லா வாசல்களையும் திறந்து வைத்துக் காத்திருக்கிறது. ஏற்காடு இடைத்தேர்தலைப் பயன்படுத்திக் கொண்டு மதிமுக தவிர்த்து காங்கிரஸ், பாஜக என 24 கட்சிகளுக்கு ஆதரவு கேட்டு கருணாநிதி கடிதம் எழுதினார். ஆனால் இந்த கடிதத்தின் ஒரே நோக்கம் பாஜகவுடன் கூட்டணி ஏற்பட்டுவிடாதா என்ற உள்ளூர ஆசைதான்.
இதற்கு ஓரளவு வரவேற்பு இருக்கவே செய்தது. பாஜக, திமுக கூட்டணி ஏற்பட்டுவிடுமோ என்று சந்தேகம் கொள்ளுமளவுக்கு காட்சிகளும் அரங்கேறின. ஆனால் தற்போது பாஜக திமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
மக்களவைத் தேர்தல் தொடர்பாக முடிவு எடுப்பதற்காக திமுக பொதுக்குழுவை டிச.15-ஆம் தேதி கருணாநிதி கூட்டியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக விவாதிப்பதற்கு முன்பாக பாஜகவின் கருத்தை அறிந்து தெரிவிக்குமாறு டி.ஆர்.பாலுவிடம் கருணாநிதி தெரிவித்திருந்தார்.
தில்லியில் அருண்ஜேட்லியைச் சந்தித்து டி.ஆர்.பாலுவும் பேசியதாகத் தெரிகிறது. ஆனால் அருண்ஜேட்லியிடம் இருந்து திருப்திகரமான பதில் வரவில்லை என்று கூறப்படுகிறது.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸூக்கு எதிராக அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஊழலை முதன்மைப் படுத்தி பிரசாரம் செய்ய உள்ள நிலையில், கூட்டணியில் திமுகவை வைத்துக் கொண்டு ஊழல் தொடர்பாக பிரசாரம் செய்ய முடியாது என்று பாஜக கருதுகிறது. இதனால் திமுக அல்லாத கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முயற்சிக்குமாறு தமிழக பாஜகவினருக்கு பாஜக மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
பாஜக கூட்டணியைப் பலப்படுத்த முயற்சித்து வரும் தமிழருவி மணியன், அதிமுக - திமுக அல்லாத கட்சிகளே பாஜக கூட்டணியில் இடம்பெறும் என்பதை வெளிப்படையாகவே அறிவித்துள்ளார். மேலும் பாஜக கூட்டணியை திங்கள்கிழமை அறிவிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். இதனால் பாஜக கூட்டணியில் பங்கேற்கும் ஆசையை திமுக மறக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் பாஜக கூட்டணியில் மதிமுகவும், பாமகவும் இடம்பெறுவது உறுதியாகி உள்ளது. கூட்டணியில் தி.மு.க. இடம்பெறக்கூடாது எனும் உத்தரவாதத்துடன்தான் மதிமுகவும், பாமகவும் பாஜக கூட்டணியில் பங்கேற்கின்றனர்.
இந்தக் கூட்டணியில் தேமுதிகவையும் இடம்பெறச் செய்வதற்கான முயற்சியில் தமிழருவி மணியன் ஈடுபட்டுள்ளார். விஜயகாந்த் இன்னும் தெளிவான முடிவு எடுக்க முடியாத நிலையில் உள்ளார்.
திமுகவை அவர் தாக்கிப் பேசினாலும், திமுக, காங்கிரஸூடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருக்கவே செய்கிறது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். இதனை அண்மையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார். பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சியைவிட்டு விலகியுள்ள நிலையில் திமுகவின் பக்கம் சாய்வது மூலம் கட்சியைப் பலப்படுத்த முடியும் என்றும் அவர் கருதுகிறார். எனினும் இறுதி முடிவை அவர் எட்டவில்லை.
பாஜக தலைமையில் மூன்றாவது அணி அமைவதால், நரேந்திர மோடி அலையில் தனது வாக்குவங்கியில் பிளவு ஏற்படும் என்கிற அச்சம் அதிமுகவுக்கு இருக்கிறது. நரேந்திர மோடியின் தலைமை, அதிமுகவில் மட்டுமல்லாமல், எல்லா கட்சிகளின் வாக்குகளையும் பாதிப்பதுடன், கட்சி சாராத இளைஞர் வாக்குகளையும் கவரும் என்றும் அதனால் பாஜக தலைமையிலான மூன்றாவது அணி கணிசமான செல்வாக்கைப் பெறும் என்றும் கருதப்படுகிறது.
தற்போதைய நிலையில் மக்களவைத் தேர்தலில் 3 அணி அமையப் போவது உறுதியாகி உள்ளது.
கம்யூனிஸ்ட்டுகளுடன் இணைந்து அதிமுக தலைமையில் ஓர் அணியும், மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து பாஜக தலைமையில் ஓர் அணியும் அமைகிறது.
இந்த அணியில் தே.மு.தி.க.வும் இணைந்தால், அந்தக் கூட்டணி தி.மு.க., அ.தி.மு.க. இரண்டும் அமைக்கும் அணிகளுக்கு நிகரான பலம் பொருந்தியதாக அமையக்கூடும்.
திமுக பக்கம் தற்போது விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் மட்டுமே உள்ளது.
ஒருவேளை கூட்டணிக்குத் தேமுதிக வந்தால் காங்கிரûஸயும் சேர்த்துக் கொண்டு திமுக தேர்தலைச் சந்திக்கும். அப்படித் தேமுதிக வராவிட்டால், திமுக தனித்தே போட்டியிடவும் துணிந்து வருகிறது.
அப்படியானால் காங்கிரஸ்? தேமுதிகவிடம் இணைந்து நான்காவது அணி அமைக்கவும், திமுகவோ, அதிமுகவோ ஏற்றுக்கொண்டால் அந்த அணியில் இணையவும், எதுவுமே இல்லையென்றால் தனித்துப் போட்டியிடவும் தயாராகி விட்டிருப்பதாகத் தெரிகிறது.
மக்களவைத் தேர்தலில் இருமுனைப் போட்டி இல்லை என்பது உறுதியாகிவிட்டது. அமையப் போவது முன்முனைப் போட்டியா, நான்கு முனைப் போட்டியா என்பதுதான் கேள்வி.

No comments:

Post a Comment