14.12.13

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்


இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் பிரான்ஸ் அணியினர்.
உள்ளூரில் நடைபெற்று வரும் ஜூனியர் உலக்க கோப்பை போட்டியில் மிகுந்த ஏமாற்றம் அளித்த இந்திய அணி, 9-வது இடத்துக்கான ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இந்த ஆட்டம் தில்லியில் உள்ள தயான் சந்த் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெறுகிறது.
இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடைபெறும் எவ்வகையான போட்டியாக இருந்தாலும் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அவ்வகையில் 9-வது இடத்துக்கான இந்த ஆட்டம் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுல்ளது.
16 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களது லீக் சுற்றில் 3-வது இடத்தை பிடித்தன. இதனால், இரு அணிகளும் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை.
மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி, ஆட்டத்தின் தொடக்கத்திலேயே கோல் வாங்கியது; கோலடிக்கும் வாய்ப்பை இழந்தது ஆகிய காரணங்களால் காலிறுதி வாய்ப்பை இழந்தது. இருப்பினும், வியாழக்கிழமை இரவு நடைபெற்ற ஆர்ஜெண்டினாவுக்கு எதிரான ஆட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது.
புதன்கிழமை நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் 4-0 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இரு அணிகளும் 10 இடங்களுக்குள் முன்னேறின.
அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறவில்லை என்றாலும், பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும். இதனால், சனிக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெற இந்திய அணியினர் அனைத்து வகையிலும் முயற்சி செய்வர்.
ஆனால், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம், மற்ற அணிகளுக்கு எதிரான ஆட்டத்தைப் போன்றதுதான் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் பல்ஜீத் சிங் சைனி தெரிவித்தார்.
"இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் ரசிகர்களுக்கு வேண்டுமானால் சிலிர்ப்பை ஏற்படுத்தலாம். ஆனால் எங்களுக்கு அல்ல. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தினால், அது வீரர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். அதனால், தேவையற்ற தவறுகளை அவர்கள் செய்ய நேரிடும்' என்றும் சைனி தெரிவித்தார்.
சாதனை படைத்த பிரான்ஸ்
உலக ஜூனியர் ஹாக்கி போட்டியின் இறுதிச்சுற்றுக்கு பிரான்ஸ் அணி முன்னேறியது. இதனால், முதன்முறையாக உலகக் கோப்பை போட்டியின் இறுதிச்சுற்றுக்கு அந்த அணி தகுதி பெற்றது.
பிரான்ஸ் அணி, தனது அரையிறுதிச்சுற்றில் மலேசியாவுடன் வெள்ளிக்கிழமை மோதியது. இதில் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன.
இதனால், வெற்றியைத் தீர்மானிக்க பெனால்டி ஷுட்-அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இம்முறையில், பிரான்ஸ் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
1979-ம் ஆண்டிலிருந்து ஜூனியர் அளவிலான உலகக் கோப்பை போட்டியில் பிரான்ஸ் அணி பங்கு பெற்று வருகிறது. ஆனால், ஒருமுறை கூட முதல் சுற்றை அந்த அணி தாண்டியதில்லை. அதிகபட்சமாக 7-வது இடத்தை ஒருமுறை பிடித்திருந்தது. தற்போது காலிறுதி, அரையிறுதியை தாண்டி முதன்முறையாக இறுதிச்சுற்றை எட்டி வரலாறு படைத்துள்ளது பிரான்ஸ்.

No comments:

Post a Comment