14.12.13

தென்னாட்டிலிருந்து மீண்டும் ஒருவர் பிரதமராக வாய்ப்பு: தேவ கெளடா


தென்னாட்டிலிருந்து மீண்டும் ஒருவர் பிரதமராக வாய்ப்பு உள்ளது என முன்னாள் பிரதமர் தேவ கெளடா தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் முதல்வர் ஜெயலலிதா, பிரதமராக விரும்புவது குறித்து தங்களின் கருத்து என்ன? என்ற கேள்விக்கு இவ்வாறு அவர் பதிலளித்தார்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் காமராஜ் பவுண்டேஷன் ஆப் இந்தியாவின் 37ஆவது தேசிய மாநாட்டை வெள்ளிக்கிழமை கொடியேற்றித் தொடங்கி வைத்த அவர், பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
மத்தியில் ஆளும் காங்கிரஸ் ஆட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். அண்மையில் நடைபெற்ற 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் இதைக் காட்டுகின்றன. பணவீக்கம், விலைவாசி உயர்வு போன்ற பல்வேறு பிரச்னைகளில் மத்திய அரசின் செயல்பாடுகளை மக்கள் விரும்பவில்லை.
ஒன்பது மாதங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட "ஆம் ஆத்மி' கட்சி தில்லியில் குறிப்பிடத்தக்க இடங்களைப் பெற்றிருக்கிறது. புதிய அரசியல் கலாசாரத்தை அந்தக் கட்சி முன்வைத்திருக்கிறது. ஒவ்வொரு மக்களவைத் தேர்தலின்போதும் காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக மூன்றாவது அணிக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நாட்டில் தற்போது நிலவும் பிரச்னைகளுக்கு மாற்றாக, மாநிலக் கட்சிகள் ஒருங்கிணைந்து கொள்கையையும், செயல்திட்டத்தையும் இறுதி செய்து அதைத் தேர்தலுக்கு முன்னதாக மக்கள் மத்தியில் முன்வைக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான் மக்கள் ஏற்பார்கள்.
நரசிம்மராவுக்குப் பிறகு தென்னாட்டிலிருந்து நான் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டேன். அதேபோல், இந்த முறையும் தென்னாட்டில் இருந்து ஒருவர் பிரதமராக தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 377-ன்படி ஓரினச்சேர்க்கை குற்றம் என்பதை உச்சநீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி கருத்தறிந்து, சட்ட நிபுணர்களின் கருத்த்தையும் பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் தேவ கெளடா.

No comments:

Post a Comment