27.12.13

ஐந்தாண்டு திட்டம்: மானிய நிதி ஒதுக்கீட்டில் 1% குறைப்பு






12-ஆவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் (2012-17) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மானியங்களுக்குச் செலவிடும் நிதி ஒரு சதவீதம் குறைக்கப்படும் என்று மத்திய திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா கூறினார்.
சென்னை பொருளாதார கல்வி மையம் சார்பில் ராஜா ஜே. செல்லையா முதலாவது நினைவு சொற்பொழிவு கோட்டூர்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் அவர் ஆற்றிய உரை:
உள்கட்டமைப்பு வசதிகளுக்காக மட்டுமே அரசு நிதி செலவிடப்பட வேண்டும். வளர்ச்சித் திட்டங்களுக்காக அடுத்த 10 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீத நிதி தேவைப்படும். எனவே, மானியங்களுக்குச் செலவிடப்படும் நிதியை 2.6 சதவீதத்திலிருந்து 1.6 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நேரடி மானியம்: பிற வளரும் நாடுகளைப் பின்பற்றி மானியங்களை நேரடியாக பணமாக வழங்கும் திட்டம் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆதார் அடையாள அட்டை எண்ணுடன் இணைக்கப்படும் பயனாளிகளின் வங்கிக் கணக்கிலேயே மானியத் தொகை செலுத்தப்படும்.
இதன்மூலம் நலத் திட்டங்களின் பயன் நேரடியாக பயனாளிகளுக்கே சென்று சேரும். பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி உள்ளிட்டப் பொருள்களில் 30 சதவீதம் வெளிச்சந்தைகளுக்குப் போகிறது. ஆன்-லைன் மூலமாக நடைபெறும் பணப் பரிவர்த்தனையால் இதுபோன்ற தவறுகளுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. இந்தத் திட்டம் விரும்புகிற மாநிலங்களில் மட்டுமே செயல்படுத்தப்படும்.
தொழிலாளர் கல்வியறிவு: நமது நாட்டில் குறைந்த சதவீதத்தினர் மட்டுமே ஐ.டி. உள்ளிட்ட துறைகளில் திறன்மிக்கப் பணியாளர்களாக உள்ளனர். ஆனால், பெருவாரியான தொழிலாளர்கள் தொழில் பயிற்சி திறன் குறைந்தவர்களாகவே உள்ளனர்.
தொழிலாளர்களின் சராசரி கல்வியறிவு 5-ம் வகுப்பு என்ற அளவிலேயே உள்ளது. ஆனால், சீனாவில் 8-ம் வகுப்பு என்ற அளவில் உள்ளது. நமது தொழிலாளர்கள் கல்வியறிவு பெற்றவர்களாகவும், தொழில்திறன் மிக்கவர்களாகவும் இருந்தால் மட்டுமே நாடு வளர்ச்சி பெற முடியும்.
வரி விதிப்பில் மாற்றம்: வரி விதிப்பு முறைகளில் பெரிய மாறுதல் தேவைப்படுகிறது. தனிநபர் வரிவிதிப்பில் பிறநாடுகளுடன் ஒப்பிடும்போது நாம் மோசமாக இல்லை. தொழில் நிறுவனங்களுக்கான வரிவிதிப்பு உலக அளவில் 20 சதவீதமாக இருக்கும்போது, இங்கு 34 சதவீதமாக உள்ளது.
இந்த வரிவிதிப்பு முறையில் மிகப்பெரிய மாறுதலை ஏற்படுத்தும் சீர்திருத்தம், சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்பதுதான் எனது கருத்து. இந்த வரிவிதிப்பை அமல்செய்வது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே இருந்த இடைவெளி இன்னமும் தொடர்கிறது. ஆனால், இந்தப் பிரச்னையில் அனைத்துத் தரப்பினரும் ஒருமித்த கருத்தை எட்டுவார்கள் என எதிர்ப்பார்க்கலாம்.
பொருளாதார நிலை: இந்தியா அதிகக் கடன் வாங்கியுள்ள நாடுகளின் வரிசையில் உள்ளது. வரி சீர்திருத்தம் மேற்கொள்ளும் அதேநேரத்தில், வெளிநாட்டு முதலீட்டாளர்களையும், தனியார் துறையினரையும் ஈர்க்க வேண்டும்.
உலகமயமாக்கலில் நன்மைகள் உள்ளது போலவே சில தீமைகளும் உள்ளன. ஏதோ ஒரு நாட்டில் ஏற்படும் நிதிச்சிக்கல் நமக்கும் பிரச்னையை ஏற்படுத்தலாம். எனவே, இதைச் சமாளிப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அடுத்த 5 ஆண்டுகளில் வருவாயை அதிகரிப்பதோடு, மானியங்களுக்கான நிதி ஒதுக்கீட்டையும் குறைக்க வேண்டும். அதன்மூலம், மொத்தக் கடன் அளவையும், நிதிப் பற்றாக்குறையையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். உலகளவில் நிதிநெருக்கடி ஏற்பட்டால், அதைச் சமாளிக்கும் திறனுடன் நமது பொருளாதாரம் இருக்க வேண்டும் என்றார் அவர்.
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் சி.ரங்கராஜன், தென்னிந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்புத் தலைவர் ஜவஹர் வடிவேலு, சென்னை பொருளாதார கல்வி மைய இயக்குநர் சண்முகம் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
டீசல் விலை: மேலும் உயர்த்த முடிவு
சர்வதேச சந்தையைப் பொருத்து டீசல் விலையை கூடுதலாக நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுத் தலைவர் சி.ரங்கராஜன் கூறினார்.
சென்னை பொருளாதார மையத்தில் நடந்த கருத்தரங்கத்தில் கலந்து கொண்டபின் அவர் செய்தியாளர்களிடம் பேசியது:
ரூபாயின் மதிப்பு சரிந்ததால் சர்வதேச சந்தையில் டீசலின் விலைக்கும், இங்குள்ள விலைக்கும் அதிக வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சந்தை மதிப்புக்கு ஏற்றவாறு டீசல் விலையை நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் மாதந்தோறும் 50 பைசா உயர்த்துவதற்குப் பதிலாக சற்று அதிகமாக விலை நிர்ணயிக்கப்படும். இது விரைவில் அமலாக்கப்படும் என்றார் அவர்.

No comments:

Post a Comment