27.12.13

மக்களவைத் தேர்தல் அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட ஒன்பது அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்துகிறது.
தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையாளர் சுதீர் திரிபாதி தலைமையில், தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு இந்தக் கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணிகள், வாக்குச் சாவடி மையங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்களில் அரசியல் கட்சிகளின் கருத்துகள் கோரப்படவுள்ளன. தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வரும் 6 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. முன்னதாக, இதற்கான பணிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் ஏற்கெனவே ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த நிலையில், திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை: மக்களவைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக தென் மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஏற்கெனவே ஆலோசனை நடத்தியுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் கருத்துகளைக் கோரும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்பது அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்துக்கு தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையாளர் சுதீர் திரிபாதி தலைமை வகிக்கிறார். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
கட்சிகள் எவை தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்பது கட்சிகள் உள்ளன. அதிமுக, திமுக, பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய முற்போக்கு திராவிட கழகம், காங்கிரஸ், பாஜக, தேசிய வாத காங்கிரஸ் ஆகிய ஒன்பது கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்சியில் இருந்தும் தலா இரண்டு பேர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். மக்களவைத் தேர்தலை எத்தனை கட்டங்களாக நடத்துவது, வாக்குச் சாவடி மையங்களை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவிக்கவுள்ளளனர்.
மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை: அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் காலையில் ஆலோசனை முடிந்தபிறகு, பிற்பகலில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் சுதீர் திரிபாதி கலந்துரையாடுகிறார். தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர்களிடம் கருத்துகள் கேட்கப்படவுள்ளன. தலைமைச் செயலகத்தில் இருந்து விடியோ கான்பரன்சிங் முறை மூலம் ஒவ்வொரு ஆட்சியரிடமும்  தனித்தனியாக இந்த ஆலோசனையை சுதீர் திரிபாதி நடத்துகிறார்.

No comments:

Post a Comment