6.12.13

லோக்பால் மசோதாவுக்காக 10–ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் அன்னா ஹசாரே அறிவிப்பு



புதுடெல்லி,
லோக்பால் மசோதாவுக்காக வருகிற 10–ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்பதாகவும், ஊழலுக்கு எதிரான இந்திய இயக்கத்தை மீண்டும் தொடங்குவதாகவும் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
லோக்பால் மசோதா
வலிமையான லோக்பால் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற வலிறுயுத்தி, சமூக ஆர்வலரும், காந்தியவாதியுமான அன்னா ஹசாரே, ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ என்ற இயக்கத்தை தொடங்கி பல்வேறு போராட்டங்களை நடத்தினார். இதைத்தொடர்ந்து பாராளுமன்ற மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை.
இந்தநிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அன்னா ஹசாரே கூறுகையில், ‘‘மத்திய அரசு வலிமையான லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றவில்லையெனில், குளிர்கால கூட்டத்தொடரின் முதல்நாளில் இருந்தே டெல்லி ராம்லீலா மைதானத்தில் நான் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக, நாட்டு மக்களிடம் வாக்களித்து இருந்தேன். ஆனால் நான் சமீபத்தில் செய்து கொண்ட அறுவை சிகிச்சையை தொடர்ந்து டாக்டர்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கூறியுள்ளனர். இதனால் டெல்லிக்கு பதிலாக எனது சொந்த ஊரான மராட்டிய மாநிலம் ராலேகான் சித்தியில், வருகிற 10–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்பேன்’’ என்று தெரிவித்தார்.
மாறியிருக்கும்
முன்னதாக டெல்லியில் செய்தி சானல் ஒன்று நடத்திய மாநாட்டில் அன்னா ஹசாரே பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
ஊழலுக்கான இந்திய இயக்கம் ஒரு திருப்புமுனையை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, கட்சி என்னும் அரசியல் பாதையை தேர்ந்தெடுப்பது சரியானது அல்ல. எங்கள் குழு வலிமை வாய்ந்ததாக, ஒன்றிணைந்து இருந்திருந்தால் இன்றைக்கு நாட்டின் நிலவரமே மாறிப்போய் இருக்கும்.
மீண்டும் இயக்கம்
டெல்லி சட்டசபை தேர்தலின்போது, நிதி திரட்டுவதற்காக ‘ஆம் ஆத்மி’ கட்சி எனது பெயரை பயன்படுத்துவது சரியல்ல என கெஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதினேன்.
ஊழலுக்கு எதிரான எனது இயக்கத்தை வரும் 10–ந்தேதி நான் மீண்டும் தொடங்கப்போகிறேன். லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று ஏற்கனவே 6 மாநிலங்களில் பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டேன். என்னோடு கெஜ்ரிவாலோ அல்லது பிற எந்தவொரு அரசியல் தலைவரோ மேடையை பகிர்ந்துகொள்வதை நான் விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
கோர்ட்டில் சொல்வேன்
‘‘ஊழலுக்கு எதிரான இந்திய இயக்கத்தின் போராட்ட காலத்தில் திரட்டப்பட்ட நிதி தொடர்பாக கோர்ட்டில் பொதுநல வழக்கு உள்ளதே?’’ என்று அன்னா ஹசாரேயிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‘‘எனது வங்கிக்கணக்கில் பணம் இல்லை. யார் பணம் வசூலித்தனர், யார் அதை பயன்படுத்தினர் என்பது எனக்கு தெரியாது. இதை கோர்ட்டில் கூறுவேன்’’ என பதில் அளித்தார்.
அரவிந்த் கெஜ்ரிவாலுடனான கருத்து வேறுபாடுபற்றிய கேள்விக்கு அன்னா ஹசாரே பதில் அளிக்கையில், ‘‘நாம் இங்கே கூடி இருப்பது இந்த நாட்டை எப்படி மாற்றுவது என்பது பற்றி சிந்திக்கத்தான். அன்னா ஹசாரேவுக்கும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையேயான மோதல் பற்றி சிந்திக்க அல்ல’’ என கூறினார்.
ஏன் இந்த வெறுப்பு?
லோக்பால் மசோதா பற்றிய கேள்விக்கு அன்னா ஹசாரே பதில் அளிக்கையில், ‘‘இந்த மசோதாவை நிறைவேற்றுவதாக மத்திய அரசு எனக்கு வாக்குறுதி அளித்தது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக எதுவும் நடைபெறவில்லை. அவர்கள் மசோதா நிறைவேறுவதை விரும்பவில்லை’’ என கூறினார்.
‘‘அரசியல்வாதிகள் மீது அப்படியென்ன வெறுப்பு உங்களுக்கு?’’ என்ற கேள்விக்கு அன்னா ஹசாரே, ‘‘நான் அரசியலை வெறுக்கிறேன். ஏனெனில் அரசியல் என்பது பணத்தையும், அதிகாரத்தையும் கடந்து எதையும் பார்ப்பதில்லை. பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தூய்மையானவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். சில மக்கள் வாழ்வதற்காக சாப்பிடுகிறார்கள். ஆனால் நமது அரசியல்வாதிகள் சாப்பிடுவதற்காக வாழ்கிறார்கள். இந்தியாவிற்குள் பெரிய கம்பெனிகளை கொண்டு வருவதற்காக, சுற்றுச்சூழலை கெடுப்பதற்காக கொள்கைகள் வகுக்கப்படுகின்றனவே தவிர ஏழை மக்களை மேம்பாடு அடையச்செய்வதற்காக கொள்கைகள் வகுக்கப்படுவதில்லை’’ என பதில் அளித்தார்.

No comments:

Post a Comment