6.12.13

மசோதாக்களை நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் பிரதமர் மன்மோகன்சிங் பேட்டி



புதுடெல்லி,
பாராளுமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் கேட்டுக்கொண்டார்.
மன்மோகன்சிங் உறுதி
பாராளுமன்ற கூட்டத்தொடர்  தொடங்கியது. நேற்றைய கூட்டம் முடிந்ததும் பாராளுமன்றத்துக்கு வெளியே பிரதமர் மன்மோகன்சிங் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவரிடம், மத வன்முறை தடுப்பு மசோதாவுக்கு நரேந்திரமோடி எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பிரதமர் மன்மோகன்சிங், ‘‘குளிர்கால கூட்டத்தொடர் மிகக்குறைந்த அளவாக 12 நாட்களே நடைபெற உள்ளது. அத்தியாவசியமான அலுவல்கள் விரைவாகவும், முடிந்த அளவுக்கு சுமுகமாகவும் நிறைவேற பாராளுமன்றத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள அனைத்துக்கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். பாராளுமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்ற அனைத்துக்கட்சிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும். பெரிய அளவிலான சட்ட முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து பிரச்சினைகளிலும் பரந்த அளவில் கருத்தொற்றுமை ஏற்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுப்போம்’’ என பதில் அளித்தார்.
ஷிண்டே கருத்து
இந்த பிரச்சினையில் மத்திய உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே நிருபர்களிடம் பேசுகையில், ‘‘இந்த மசோதா தொடர்பாக நாங்கள் கருத்தொற்றுமை ஏற்படுத்துவோம்’’ என கூறினார்.
‘‘முக்கியத்துவம் வாய்ந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா, பாராளுமன்ற மக்களவையில் கொண்டு வரப்படுமா?’’ என்றும் ஷிண்டேயிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில், ‘‘பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்ற எண்ணியுள்ள மசோதாக்களில் நாங்கள் கருத்தொற்றுமை ஏற்படுத்துவோம். இந்த மசோதாக்கள் சுமுகமாக நிறைவேறுவதற்கு அனைத்துக்கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’’ என்று கூறினார்.
கமல்நாத் கருத்து
பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கமல்நாத்தும் நிருபர்களிடம் பேசினார். அவர், ‘‘லோக்பால் சட்டத்தை இயற்றுவதில் அரசு ஆர்வம் கொண்டுள்ளது. ஆனால் சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டி உள்ளது’’ என கூறினார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் பேசுகையில், ‘‘லோக்பால் சட்டமசோதா மீது மேல்–சபை நிலைக்குழு அறிக்கை அளித்துள்ளது. இது மேல்–சபையில் முதலில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் இது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிலிருந்து மாறுபட்டதாகும். மறுபடியும் இந்த மசோதா பாராளுமன்றத்திற்கு வர வேண்டும். எனவே இதுதொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். அரசியல் கட்சிகளுடன் நான் பேசிக்கொண்டு இருக்கிறேன்’’ என கூறினார்.

No comments:

Post a Comment