6.12.13

பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்த புவி அழகிப் போட்டியில் சுற்றுச்சூழல் அழகியாக இந்தியாவின் சோபிதா தேர்வு



மணிலா,
பிலிப்பைன்ஸ் நாட்டில் நடக்கிற புவி அழகிப் போட்டியில் சுற்றுச்சூழல் அழகியாக இந்தியாவின் சோபிதா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புவி அழகிப் போட்டி
பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில் சனிக்கிழமை  புவி அழகிப் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் உலக நாடுகளில் இருந்து அழகிகள் பலரும் கலந்துகொள்கின்றனர். இந்தியாவின் சார்பில் ‘பெமினா மிஸ் இந்தியா’ அழகி, 21 வயதான சோபிதா துலிபாலா கலந்துகொண்டிருக்கிறார்.
புவி அழகிப் போட்டியையொட்டி பல்வேறு பட்டங்களுக்கான அழகிகளும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
சுற்றுச்சூழல் அழகி
இந்த நிலையில் சோபிதா, சுற்றுச்சூழல் அழகியாக (மிஸ் எக்கோ பியூட்டி)  தேர்ந்தெடுக்கப்பட்டு தங்கம் வென்றார். இவர் 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுக்களை பெற்று இந்தப் பட்டத்தை வென்றார்.
இந்தப் புவி அழகிப் போட்டியில் ஏற்கனவே புகைப்படம் எடுக்க ஏற்ற எடுப்பான முகத்தோற்ற அழகியாக (போட்டோஜெனிக்) தேர்ந்தெடுக்கப்பட்டு இவர் தங்கப்பதக்கம் பெற்றார்.
ஆந்திராவை சேர்ந்தவர்
இவர் ஆந்திர மாநிலம், தெனாலியில் பிறந்தவர். மாடல் அழகி. பரதநாட்டியக் கலைஞர். மும்பை கல்லூரி ஒன்றில் படித்து வணிகவியல் பட்டம் பெற்றார். தற்போது புனேயில் உள்ள சிம்பயாசிஸ் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் மற்றும் கம்பெனிச் சட்டத்தில் முதுநிலை பட்டயப்படிப்பு படித்து வருகிறார்.
இவர் மக்களிடையே சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார்.
தமிழகத்தில் சேவை
தனது சேவையின் ஒரு அங்கமாக தமிழ்நாட்டில், கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு இவர் வந்து கிராமப்புற மக்களுடன் சில நாட்களை கழித்தார். அப்போது அவர் அந்த மக்களிடம் பாதுகாக்கப்பட்ட குடிநீரை குடிக்க வேண்டியதின் அவசியம் குறித்து விளக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அத்துடன் அந்த மாவட்டத்தில் உள்ள தோப்டிகுப்பம் கிராமத்தில் உள்ள வீடுகளில் தண்ணீர் சுத்திகரிப்பு சாதனங்களை நிறுவ உதவி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment