6.12.13

பழிக்குப்பழியாக, மதுரையில் பயங்கர சம்பவம்: ஜாமீனில் வந்தவர் வெட்டிக்கொலை பெட்ரோல் குண்டுகள் வீச்சு; மேலும் 4 பேர் படுகாயம்



மதுரை,
பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அப்போது சரமாரியாக பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இந்த சம்பவத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
பெட்ரோல் குண்டு வீச்சில் 7 பேர் சாவு
கடந்த 2012–ம் ஆண்டு அக்டோபர் 30–ந்தேதி தேவர் ஜெயந்தி விழாவிற்காக, மதுரையை அடுத்த புளியங்குளம், சிலைமான் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 20 பேர் ஒரு காரில் பசும்பொன் கிராமத்திற்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த கார் மதுரை ரிங்ரோடு, சிந்தாமணி அருகே வந்து கொண்டிருந்த போது, ஒரு கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசியது.
இதில் தீப்பிழம்புகள் பறந்து, 20 பேர் உடல்கள் கருகின. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், ஜெயபாண்டி, சுந்தரபாண்டி, வெற்றிவேல், தேசிங்குராஜா, விஷ்ணுப்பிரியன், சிவராமன் ஆகிய 7 பேர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டனர்.
11 பேர் கைது
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி, அனுப்பானடி பகுதியை சேர்ந்த ராமர்(25), மோகன்(27), விக்னேஷ்(22), சோப்பு நாகராஜ்(20), முத்துக்கருப்பன்(20), முத்துவிஜயன்(24), கிளிகார்த்திக்(25), பங்க் மணி(20), சந்தோஷ், சந்திரசேகர்(20), சோனையா(20) ஆகிய 11 பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஓராண்டு கழித்து கடந்த வாரம் இவர்கள் அனைவரும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த 11 பேரும் மதுரை ஜே.எம்.6–வது கோர்ட்டில் தினமும் காலை, மாலை என இருவேளை கையெழுத்து போட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி, அவர்கள் கோர்ட்டுக்கு வந்து கையெழுத்து போட்டுச் சென்றனர்.
நேற்று காலையில் அவர்களும், அவர்கள் ஆதரவாளர்களுமாக 18 பேர் காரிலும், மோட்டார் சைக்கிள்களிலும் கோர்ட்டுக்கு வந்தனர். அங்கு கையெழுத்து போட்டு விட்டு 10.45 மணிக்கு வீட்டுக்குப் புறப்பட்டனர். அவர்களுக்கு பாதுகாப்பாக போலீசாரும் சென்றனர்.
கார், தெப்பக்குளத்தைத் தாண்டி அனுப்பானடி சாலையில் சென்று கொண்டிருந்தது. தெப்பக்குளம் பகுதியை தாண்டியதும், பாதுகாப்பிற்குச் சென்ற போலீசார் வழக்கம்போல் திரும்பி விட்டனர்.
பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல்
அந்த நேரத்தில் அனுப்பானடி சாலையில் உள்ள ஒரு பள்ளி அருகே 10–க்கும் மேற்பட்டவர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் திடீரென்று ஆயுதங்களுடன் காரை மறித்து, பெட்ரோல் நிரப்பிய 10–க்கும் மேற்பட்ட பாட்டில் குண்டுகளை சரமாரியாக வீசினர். இதில் 2 மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்தன. ஆனால் காரில் வீசிய 6 குண்டுகள் வெடிக்கவில்லை.
இந்த நேரத்தில் பின்னால் ஆட்டோவில் வந்த சிலரும் அவர்களோடு சேர்ந்து கொண்டு, காரில் வந்த முத்துவிஜயன், மோகன், நாகராஜன், சோனையா உள்பட 8 பேரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அந்த 8 பேரும் உயிர் பிழைக்க தப்பி ஓடினார்கள். ஆனால் அந்த கும்பல் அவர்களை ஓட, ஓட விரட்டி வெட்டியது.
பலத்த வெட்டுக்காயம் பட்ட முத்துவிஜயனை அந்த கும்பல் சுற்றி வளைத்து மீண்டும் வெட்டியது. அவர் அதே இடத்தில் அவர் துடிதுடித்து இறந்தார். பின்பு கொலையாளிகள் அனைவரும் ஆட்டோவிலும் காரிலும் தப்பினர்.
போலீஸ் வருகை
இந்நிலையில், வெட்டுக்காயம் பட்ட விக்னேஷ் என்பவர், தெப்பக்குளம் போலீஸ் நிலையத்திற்கு ஓடிச்சென்று நடந்த சம்பவங்களை பதற்றத்துடன் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர்.
அவர்கள் விக்னேஷ், சோனையா, அர்ச்சுனன், முனீஷ்குமார் ஆகியோரை சிகிச்சைக்காக பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட முத்துவிஜயன் உடல் பிரேத பரிசோதனைக்காக பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஏற்கனவே பெட்ரோல் குண்டு வீச்சில் 7 பேர் இறந்ததற்கு பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதுபற்றி மேற்கொண்டு விசாரித்து வருகிறார்கள்
திருமணமாகாதவர்
கொலையுண்ட முத்துவிஜயனுக்கு 24 வயது ஆகிறது. இன்னும் திருமணமாகவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சோனையாவின் உடல்நிலை மோசமாக இருப்பதால் டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். காயம் அடைந்த 4 பேரில் முனீஷ்குமார், அர்ச்சுனன் ஆகியோர் பழைய வழக்குகளில் இல்லை என்றும், அவர்கள் துணைக்கு வந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அனுப்பானடி, பாட்டம், சிலைமான், புளியங்குளம் ஆகிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பெரிய ஆஸ்பத்திரி முன்பு அனுப்பானடி பகுதியை சேர்ந்தவர்களும், வெட்டுப்பட்டவர்களின் உறவினர்களும் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்றும், இறந்த குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
--–
400–வது நாளில் பழி தீர்த்த கும்பல்
கடந்த ஆண்டு அக்டோபர் 30–ந்தேதி நடந்த பெட்ரோல் குண்டு வீச்சுக்குப் பதிலடியாக, அந்த சம்பவம் நடந்த 400–வது நாளில் அதேபோன்று பெட்ரோல் குண்டு வீசியதுடன் சரமாரியாக அரிவாளால் வெட்டியும் இந்த படுகொலை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் கூறியதாவது:–
‘‘சம்பவ இடத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் தான் தாக்குதல் நடத்த வந்த கும்பல் நின்று கொண்டிருந்தது. கையெழுத்து போட்டு விட்டு வந்தவர்கள் அனுப்பானடி சாலையில் வருவதை அறிந்ததும் அந்த கும்பல் ரோட்டின் இருபுறமும் நின்று கொண்டது.
பள்ளி அருகே வேகத்தடை இருப்பதால் கார் மெதுவாக ஏறி இறங்கியது. அந்தநேரத்தில் அந்த கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசியது. இதை கண்ட கடைக்காரர்கள் திகைத்துப்போனார்கள். அப்போது அந்த கும்பலின் பார்வை கடைக்காரர்கள் மீது பாய்ந்தது. ரோட்டில் கிடந்த பெரிய கட்டையை தூக்கி ஒரு கடையின் மீது அந்த கும்பல் எறிந்தது. அனைத்து கடைக்காரர்களும் கடைகளை அடைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்கள். இந்த சம்பவம் சினிமாவில் பார்ப்பது போன்று இருந்தது.’’
இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment