22.12.13

காங்கிரஸை பிடித்த தீயசக்தி நீங்கிவிட்டது

காங்கிரஸை பிடித்த தீயசக்தி நீங்கிவிட்டது என முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
கோபியில் முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவனின் 65-வது பிறந்த நாள் விழா மாவட்டத் தலைவர் எஸ்.வி.சரவணன் தலைமையில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில், காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஞானதேசிகன் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியது:
கூட்டணியில் இருந்து பிரிந்துவிட்டதால், காங்கிரஸ் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டதாக சிலர் நினைக்கின்றனர். ஆனால், காங்கிரûஸ பிடித்த தீயசக்தி நீக்கிவிட்டதாகவே கருதுகிறேன்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 1952, 1957, 1962 ஆகிய ஆண்டுகளில் வென்றுள்ளது. வி.பி.சிங், குஜ்ரால், தேவகவுடா, வாஜ்பாய் போன்றோர் கூட்டணி வைத்துத்தான் மத்தியில் ஆட்சியைப் பிடித்தனர். காங்கிரஸ் கட்சி ஒன்றுதான் தனித்து நின்று வெற்றி பெற்ற கட்சியாக உள்ளது. தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி அமைய வேண்டும் என்ற சிந்தனை ஒன்றுதான் மனதில் உள்ளது என்றார் அவர்.
விழாவில் பங்கேற்ற காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஞானதேசிகன் பேசியது:
மனதில் பட்டதை பேசக் கூடிய தனி குணம் இளங்கோவனுக்கும், எனக்கும் இருப்பதால்தான் எங்களுக்குள் ஒத்துப் போகிறது. காங்கிரஸ் கட்சிக்கு சோதனை வந்துவிட்டது என பலர் நினைக்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு எந்த சோதனையும் வரவில்லை. காங்கிரஸ் இயக்கம் தன்னலமற்ற தொண்டர்களைக் கொண்டுள்ளது.
இதன் காரணமாக எதையும் எதிர்த்து நிற்கிறது. இந்தியாவில் பல மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி பலமாக உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் மிகவும் வலிமை மிக்கதாக உள்ளது. சரியான நேரத்தில் தலைவர்கள் தவறான முடிவை எடுத்ததால்தான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க முடியவில்லை.
மக்களவை தேர்தலின்போது கூட்டணி அமைக்க வியூகம் அமைக்கப்படும். அப்போதுதான் எந்தக் கட்சி எங்களுடன் கூட்டணி அமைக்கும் என்பது தெரியும். ராகுல்காந்தி பிரதமராக வர வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் விருப்பம். பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடியை குஜராத்தில் மட்டும்தான் தெரியும். அவரின் பிரதமர் கனவு பகல் கனவாகும் என்றார் அவர்.

No comments:

Post a Comment