22.12.13

துணைத் தூதர் கைது விவகாரம்: இந்தியா-அமெரிக்கா இடையே தீவிர பேச்சுவார்த்தை



துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே கைது விவகாரம் தொடர்பாக இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை நீக்க தீவிர பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இத்தகவலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
"தேவயானி கோப்ரகடேவுக்கு தூதர் என்ற முறையில் சட்டப் பாதுகாப்பு கிடையாது' என்று அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. இதனாலேயே, அவருக்கு முழுமையான சட்டப் பாதுகாப்பை அளிப்பதற்காக ஐ.நா.வுக்கான இந்தியத் தூதராக அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய நிலைப்பாடு: இந்நிலையில், தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற "ஃபிக்கி' அமைப்பின் நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொண்டார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ""தேவயானி கைது விவகாரம் தொடர்பாக நாங்கள் அமெரிக்காவுடன் பல்வேறு நிலைகளில் தீவிர பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறோம். இந்தப் பேச்சுவார்த்தை பலனளிக்கும் வகையில் முடிவுக்கு வரட்டும். அமெரிக்காவுடன் மிகவும் மதிப்புவாய்ந்த தோழமையை நாம் கொண்டுள்ளோம். நம்மைப் பற்றி அவர்களும் இதேபோன்ற உணர்வுகளைக் கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன். தோழமையின் மதிப்பை அமெரிக்கா புரிந்து கொள்ள வேண்டும். தனது தூதர் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்காவிடம் இந்தியா எதிர்பார்ப்பது விவேகமற்றதா?'' என்று கேள்வி எழுப்பினார். அதைத் தொடர்ந்து, இந்திய நீதித்துறையின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும், இருதரப்பு உறவுகளைப் பாதிக்கும் வகையிலும் கருத்து தெரிவித்த அமெரிக்க அரசு வழக்குரைஞர் பிரீத் பராராவை மறைமுகமாகச் சாடும் வகையில் சல்மான் குர்ஷித் மேலும் கூறியதாவது:
அமெரிக்காவுடனான நமது பேச்சுவார்த்தை சிலரால் தடைபடுகிறது. அவர்கள் "இது போருக்கான நேரம்' என்று கூறுவார்கள். ஆனால் "அப்படியில்லை. போருக்கான நேரம் முடிந்துவிட்டது. இது சமாதானத்துக்கான நேரம்' என்று நாம் பதில் கூறுகிறோம்.
தேவயானி கோப்ரகடே நடத்தப்பட்ட விதம் மிகவும் அதிருப்தியளிக்கிறது. குறிப்பாக கைவிலங்கிடப்பட்டதும், ஆடை களையப்பட்டு சோதனையிடப்பட்டதும் சரியல்ல. இந்திய சட்ட அமைப்பு மந்தகதியில் செயல்படும் அமைப்பாக இருக்கலாம். உலகிலேயே மிகச்சிறந்ததாக அது இல்லாமலும் போகலாம். ஆனால், ""யாரையும் கைவிலங்கிடக் கூடாது. ஏனெனில் அது ஒரு நபரின் கண்ணியத்தைக் குறைக்கிறது'' என்று இந்திய உச்ச நீதிமன்றம் மட்டும்தான் கூறியது. அமெரிக்க உச்ச நீதிமன்றம் இவ்வாறு சொல்லவில்லை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.
நான் இந்த நாட்டின் சட்ட அமைச்சராக இருந்திருக்கிறேன். ஆடை களைந்து சோதனை போன்ற நடவடிக்கைகள் குறித்து நான் எப்போதும் கேள்விப்பட்டதில்லை. எனினும், சந்தர்ப்ப சூழ்நிலைகள் மாறுபட்டவை என்பதை நான் புரிந்து கொள்கிறேன் என்றார் சல்மான் குர்ஷித்.
அமெரிக்கா கருத்து: இந்நிலையில், வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறுகையில், ""தேவயானி கோப்ரகடே கைது விவகாரத்தில் எழுந்துள்ள பிரச்னையைத் தீர்க்க இந்தியத் தரப்புடன் அமெரிக்கா பல்வேறு நிலைகளில் தொடர்ந்து பேசி வருகிறது. தேவயானி துணைத் தூதராக இருந்தபோது சில வரம்புகளுக்கு உட்பட்ட சட்டப் பாதுகாப்புதான் இருந்தது. இப்போது அவருக்கு முழு சட்டப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஐ.நா.வுக்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது அந்தஸ்தில் இவ்வாறு மாற்றம் ஏற்பட்டுள்ளபோதிலும், அவர் மீதான பழைய குற்றச்சாட்டுகள் நீக்கப்பட மாட்டாது'' என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment