22.12.13

உணவு விடுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு



பழனியில் உணவு விடுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
பழனியில் திருவிழாக்காலம் துவங்கிய நிலையில் தினமும் பல ஆயிரம் முருகபக்தர்களும், ஐயப்ப பக்தர்களும் வந்த வண்ணம் உள்ளனர்.  வரும் பக்தர்களுக்கு சுகாதார பாதுகாப்பு வழங்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் உத்திரவின் பேரில் பழனியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
பழனி நகராட்சி நகர்நல அலுவலர் பொற்கொடி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அப்துல்வகாப், வட்டார வளர்ச்சி அலுவலக ஊர்நல அலுவலர் மகுடபதி உள்ளிட்டோர் தலைமையில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் நெடுமாறன், சேகர், மணிகண்டன் மற்றும் பலர் இப்பணியில் பங்கேற்றனர்.  பழனி நகரில் உள்ள சைவ, அசைவ உணவு விடுதிகளில் நடைபெற்ற இப்பணியின் போது விடுதிகளின் சமையற்கூடங்கள், பணியாளர்களின் சுகாதாரம் குறித்த விபரங்கள் கண்டறியப்பட்டது.
சுகாதாரக் குறைபாடுகள் உள்ள விடுதிகளுக்கு குறைகளை சரிசெய்ய காலஅவகாசமும், அபராதமும் விதிக்கப்பட்டது.  பழனியில் பெரிய உணவு விடுதிகளில் மட்டுமே இந்த ஆய்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் நகரில் மாலையில் புதிதாக முளைக்கும் உணவு விடுதிகளில் உள்ள சுகாதாரம், பிளாட்பாரக் கடைகளில் நடைபெறும் வியாபாரம், சிறிய உணவு விடுதிகளிலும் இதுபோன்ற ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

No comments:

Post a Comment