22.12.13

தன்னிச்சையான அதிகார மையங்களால் வளர்ச்சிக்குத் தடை: ராகுல் காந்தி


அரசின் பல்வேறு நிலைகளில் செயல்படும் தன்னிச்சையான அதிகார மையங்களால் தொழில் திட்டங்கள் பாதிக்கப்பட்டு, நாட்டின் வளர்ச்சிக்குத் தடை ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கவலை தெரிவித்துள்ளார்.

இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (ஃபிக்கி) ஆண்டு விழாவில் ராகுல் காந்தி பங்கேற்று சனிக்கிழமை ஆற்றிய உரை:
திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக அனுமதி வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதற்கு மந்தமான முறையில் எடுக்கப்படும் முடிவுகளும், பல்வேறு கட்டங்களில் செயல்படும் தன்னிச்சையான அதிகார மையங்களுமே காரணம். இதனால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு வருகிறது.
உதாரணத்துக்கு, ஒரு திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அமைச்சகமோ அல்லது சம்பந்தப்பட்ட மாநில முதல்வரோ எந்த முடிவு வேண்டுமானாலும் எடுக்கலாம்.
இதுபோன்ற தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் களையப்பட வேண்டும்.
நாட்டில் அணுகுமுறைகள் மாறி வருகின்றன. ஆகையால், அனைத்து விவகாரங்களுக்கும் குறிப்பிட்ட நேரத்தில் முடிவு எடுக்கும் வகையில் விதிமுறைகளை வகுத்துச் செயல்பட வேண்டும்.
கவலையளிக்கும் பணவீக்கம்: அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வுக்கு அதிகரித்து வரும் பணவீக்கமே காரணம். இதன் காரணமாக கூடுதல் பணத்தை செலவிடும் நிர்பந்தத்துக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இது தொழில்துறை வளர்ச்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் உடனடி கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
தனியாருக்கு ஏலம்: இயற்கை வளங்கள் தொடர்பான திட்டங்களை செயல்படுத்த தேவையான அனுமதிகளை அரசு வழங்கிய பின்னரே அவை தனியாருக்கு ஏலம் விடப்பட வேண்டும். உணவு பாதுகாப்புத் திட்டம், கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் போன்றவற்றில் அரசு முதலீடு செய்த காரணத்தினால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தடைப்பட்டுள்ளதாக கருத்து நிலவுகிறது. ஆனால், அதை நான் ஏற்று கொள்ள மாட்டேன் என்றார் ராகுல்.
சுற்றுச்சூழல் அனுமதியில் தாமதம்: "பல்வேறு திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது' என்று தொழில்துறையினரின் குற்றம்சாட்டினர்.
இதை ஏற்று கொண்ட ராகுல் காந்தி, சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க வேண்டியது அவசியம் அதே நேரத்தில் உரிய முடிவுகளை குறிப்பிட்ட காலத்துக்குள் எடுக்க வேண்டும் என்று கூறினார்.
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக பதவி வகிக்து வந்த ஜெயந்தி நடராஜன் வெள்ளிக்கிழமை தனது பதவியை திடீரென்று ராஜிநாமா செய்த நிலையில், ராகுல் காந்தி இவ்வாறு குறிப்பிட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

No comments:

Post a Comment