22.12.13

பணத்துக்காக செய்தி வெளியிடுவதை குற்றமாக கருத வேண்டும்


திருவனந்தபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் சீரமைப்பு கருத்தரங்கில் பேசுகிறார் தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத்

தேர்தலின்போது பணத்தைக் கொடுத்து செய்தி வெளியிடுவது தேர்தல் செயல்பாடுகளை பாதிப்பதால், அதனை குற்றமாக அறிவிக்க மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் தெரிவித்தார்.
திருவனந்தபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் சீரமைப்பு கருத்தரங்கில் அவர் கூறியதாவது:
பணம் கொடுத்து செய்தி வெளியிடும் இந்த ஊழல் அம்சமானது ஊடகம், வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் என ஒவ்வொருவரிடமும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தேர்தலின் செயல்பாடுகளுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துவதில் இது முக்கிய காரணியாக இருக்கிறது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காகவே, பணம் கொடுத்து செய்தி வெளியிடுவதை குற்றமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் விவகாரத்தில், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சியானது தங்களின் சாதனைகளை விளக்கி விளம்பரங்கள் கொடுப்பதை, தேர்தல் அறிவிப்புக்கு சில தினங்களுக்கு முன்பு நிறுத்திவிட வேண்டும்.
இருப்பினும், சுகாதாரம், வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் நுகர்வோர் தேவைகள் போன்றவற்றுக்கு விலக்கு அளிக்கலாம்.
குற்றவாளிகள் அரசியலில் ஈடுபடுவதைத் தடுப்பது, கட்சிகளின் வெளிப்படைத் தன்மை மற்றும் கட்சி நிதி தணிக்கை உள்ளிட்ட விஷயங்களில் உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டும்.
தேர்தல் மறுசீரமைப்பில் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது. ஆனால், தீர்வு மெதுவாக வந்து கொண்டிருக்கிறது. குற்றவாளிகளை தேர்தலில் போட்டியிடத் தடை செய்யும் சட்ட விவகாரத்தில், குறுகிய காலத்தில் நினைத்த மாற்றத்தை கொண்டு வந்துவிட வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது.
கடந்த மக்களவைத் தேர்தலில் 30 கோடி பேர் வாக்களிக்கவில்லை. வாக்களிப்பதை கட்டாயமாக்கும் சட்டம் கொண்டுவரப்படும்பட்சத்தில், இந்த 30 கோடி பேர் மீதும் தேர்தல் ஆணையம் வழக்குத் தொடர வேண்டும். இது நீதித்துறைக்கு கூடுதல் சுமையாக இருக்கும்.
கட்டாயத்தின்பேரில் தேர்தலில் மக்கள் வாக்களிப்பார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. இருப்பினும் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து தேசிய அளவில் பிரசாரத்தை தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டது. இதன்மூலம் 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பலன் கிடைத்ததாக உணருகிறோம் என்றார் தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத்.
திருவனந்தபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் சீரமைப்பு கருத்தரங்கில் பேசுகிறார்
தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத்

No comments:

Post a Comment