24.12.13

ஜனவரி 20, 21-இல் வேலைநிறுத்தம்: வங்கி ஊழியர் சங்கங்கள் எச்சரிக்கை

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 20ஆம் தேதி 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கப் போவதாக பொதுத்துறை வங்கி ஊழியர் சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய மன்ற (யு.எஃப்.பி.யூ.) ஒருங்கிணைப்பாளர் வெங்கடாசலம் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: "ஹைதராபாதில் திங்கள்கிழமை நடைபெற்ற எங்கள் சங்க கூட்டத்தில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து, இந்திய வங்கிகள் அமைப்பும் மத்திய அரசும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் தோல்வி ஏற்பட்டால், ஜனவரி 20ஆம் தேதி முதல் 48 மணிநேரம் (2 நாள்) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது' என்று கூறினார்.
வங்கி ஊழியர்களுக்கான தேசிய அமைப்பு (என்.ஒ.பி.டபிள்யூ) பொது செயலாளர் அஸ்வினி ராணா, இந்திய வங்கி ஊழியர்களுக்கான கூட்டமைப்பின் (பி.இ.எஃப்.ஐ.) பொதுச் செயலாளர் பிரதீப் பிஸ்வாஸ் ஆகியோரும் இதனையே தெரிவித்துள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய பிரதீப் பிஸ்வாஸ், வேலை நிறுத்தம் தொடர்பாக மத்திய அரசுக்கு இன்னும் ஓரிரு நாள்களில் நோட்டீஸ் அளிக்க இருப்பதாக கூறினார். பிரதமர், மத்திய நிதியமைச்சர், இந்திய வங்கிகள் அமைப்பு ஆகியவற்றிற்கு கோரிக்கை மனுக்களை அளிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தங்களது போராட்டத்தில் பொதுத் துறை, தனியார் துறை வங்கி ஊழியர்கள் 10 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்றும் பிரதீப் பிஸ்வாஸ் குறிப்பிட்டார்.
இதேகோரிக்கையை வலியுறுத்தி, கடந்த 18ஆம் தேதி வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment