24.12.13

சிங்கப்பூர் சிறையிலுள்ள புதுகை இளைஞரை விடுவிக்கக் கோரி மனு

சிங்கப்பூரில் அண்மையில் நடந்த கலவரத்தால் சிறைவைக்கப்பட்டுள்ள புதுக்கோட்டையைச் சேர்ந்த சந்திரசேகரை விடுதலை செய்யக் கோரி, அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்டம், தந்தாணி அருகே கருமேனிஓடை கிராமத்தைச் சேர்ந்த க. ஜானகி அளித்த மனுவில் தெரிவித்திருப்பது:
கடந்த 2011 -ம் ஆண்டில் எனது மகன் சந்திரசேகர் (36) சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்று அங்குள்ள யோங்செங் என்ற நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தான்.
இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற பேருந்து விபத்தில் புதுகையைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஏற்பட்ட கலவரத்தால்  பலரும் அந்நாட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட்டனர். அங்கு கலவரம் நடந்தபிறகு மூன்று நாள்கள் வரை என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சந்திரசேகர் பேசி வந்தான். அப்போது கலவரம் நடந்த இடத்தில் அவன் இல்லை எனவும், அந்த சமயத்தில் வேறு ஒரு பகுதியில் உறவினர்களுடன் உணவருந்திக் கொண்டிருந்ததாகவும், பயப்பட வேண்டாம் எனவும் தகவல் தெரிவித்தான். அதை எனது உறவினர்களிடமும் உறுதி செய்தேன். ஆனால், கடந்த பல நாள்களாக எனது மகனிடமிருந்து எந்தவிதத் தகவலும் இல்லை. அவன் என்ன ஆனான்,  எங்கு இருக்கிறான் என்ற வேதனையில் நான் தவித்து வருகிறேன்.
இந்நிலையில், எனது மகன் சந்திரசேகரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக இந்தியத் தூதரகம் மூலம் எனக்கு தகவல் கிடைத்தது. எவ்வித குற்றச் செயலிலும் ஈடுபடாத எனது மகனை விசாரணைக்காக சிங்கப்பூர் போலீஸார் அழைத்துச் சென்றது பயத்தை ஏற்படுத்தியுள்ளது. கணவரை இழந்து தவித்து வரும் எனக்கு, ஆதரவாக இருந்து வந்த எனது மகனை சிங்கப்பூர் சிறையிலிருந்து  விடுவிக்க மத்திய அரசின் மூலம் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment