24.12.13

ரூ. 31 கோடியில் புதிய குடிநீர் திட்டங்கள் திறப்பு

புதிய குடிநீர்த் திட்டங்களை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி காட்சி முறையில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா.உடன் (இடமிருந்து) தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், அமைச்சர் கே.பி.முனுசாமி, குடிநீர் வழங்கல் துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, நகராட்சி நிர்வாக ஆணையர் சந்திரகாந்த் காம்ப்ளே, குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குநர் விஜயராஜ்குமார்.
தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் புதிய குடிநீர் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:

விழுப்புரம் நகராட்சி குடிநீர் அபிவிருத்தித் திட்டம் ரூ.9.55 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு நபருக்கு 90 லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். இதனால், 95 ஆயிரத்து 439 பேர் பயனடைவர். மேலும், ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடலில் ரூ.70 லட்சத்திலும், திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரத்தில் ரூ.24.90 லட்சத்திலும், திருவண்ணாமலை மாவட்டம் அனக்காவூரில் ரூ.1.85 கோடியிலும், காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்குளத்தூரில் ரூ.97.50 லட்சத்திலும், வேலூர் மாவட்டம் வாலாஜாவில் ரூ.99.72 லட்சத்திலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.16.70 கோடி மதிப்பிலும் அமைக்கப்பட்டுள்ள குடிநீர்த் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, தலைமைச்செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment