24.12.13

தில்லியில் "ஆம் ஆத்மி' அரசு



தில்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் "ஆம் ஆத்மி' கட்சி தலைமையிலான புதிய அரசு, இந்த வாரம் பொறுப்பேற்கவுள்ளது. முதல்வராக அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 மொத்தமுள்ள 70 இடங்களில் 28 இடங்களைப் பெற்று சிறுபான்மை பலம் கொண்ட கட்சியாக விளங்கும் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான அரசு அமைய 8 இடங்களைக் கொண்ட காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாக உறுதியளித்துள்ளது. இதையடுத்து, தலைநகரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரகடனப்படுத்தும் நடவடிக்கை தவிர்க்கப்பட்டுள்ளது.
 எனினும், முந்தைய காங்கிரஸ் அரசுக்கு எதிராகத் தீவிர பிரசாரம் செய்து விட்டு, அக்கட்சி ஆதரவுடன் ஆட்சிக்கு வரவுள்ள ஆம் ஆத்மி அரசு அதன் ஐந்தாண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்யுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
 முன்னதாக, 31 இடங்களை பெற்று முன்னிலை பெற்றுள்ள பாஜக தில்லியில் ஆட்சி அமைக்க முன்வரவில்லை. இதையடுத்து, பாஜகவுக்கு அடுத்த நிலையில் அதிக இடம் பெற்ற ஆம் ஆத்மி கட்சியை ஆட்சி அமைப்பது குறித்து பரிசீலிக்கும்படி தில்லி பிரதேச துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் கேட்டுக் கொண்டார். அக் கட்சிக்கு ஆதரவளிப்பதாக காங்கிரஸ் முன்வந்து அறிவித்தது. அதேநேரத்தில்,பெரும்பான்மை பலம் இல்லாததால், மக்கள் கருத்தை அறிந்து முடிவைத் தெரிவிப்பதாக நஜீப் ஜங்கிடம் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கூறினார்.
 அதன்படி, சமூக வலைதளங்கள், குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள் வாயிலாக கடந்த ஒரு வாரமாக மக்கள் கருத்துகளை ஆம் ஆத்மி தலைமை வரவேற்றது. அதன்படி, தேசிய அளவில் சுமார் 7 லட்சம் பேரும், தில்லி அளவில் 2.65 லட்சம் பேரும் கருத்துத் தெரிவித்தனர். அதில் பெரும்பாலானவர்கள் காங்கிரஸ் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்க கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கருத்துத் தெரிவித்திருந்ததாக ஆம் ஆத்மி கட்சியினர் கூறினர்.
 இந் நிலையில், காஜியாபாத் கௌஷாம்பியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் அக் கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை காலையில் நடைபெற்றது. கட்சியின் அரசியல் விவாகாரக் குழுவில் உள்ள மணீஷ் சிசோடியா, யோகேந்திர யாதவ், குமார் விஷ்வாஸ் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆம் ஆத்மி தலைமையில் ஆட்சி அமைய மக்கள் விரும்புவதால், தில்லியில் ஆட்சி அமைக்க துணைநிலை ஆளுநரிடம் உரிமை கோர கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
முதல்வர் கேஜரிவால்: இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மணீஷ் சிசோடியா, "முதல்வர்  பதவிக்கு அரவிந்த் கேஜரிவால் மிகவும் தகுதியானவர். தில்லியில் எங்கள் கட்சி ஆட்சி அமைத்தால் கேஜரிவாலே முதல்வராகப் பதவி ஏற்பார்' என்றார்.
 பின்னர் தில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கை அவரது அலுவலகத்தில் சந்தித்து, ஆட்சி அமைக்க விரும்பும் கடிதத்தை அரவிந்த் கேஜரிவால் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அரவிந்த் கேஜரிவால் பேசுகையில், "ஆம் ஆத்மி கட்சி தலைமையில் புதிய அரசு அமைய வேண்டும் என்பது மக்களின் விருப்பம். அதை நிறைவேற்றும் வகையில், துணைநிலை ஆளுநரிடம் ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவித்து கடிதம் அளித்துள்ளோம்' என்றார்.
 இதனையடுத்து தில்லியில் கடந்த 2 வாரங்களாக நீடித்து வந்த இழுபறி நிலை முடிவுக்கு வந்துள்ளது. அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான புதிய அரசு இன்னும் சில தினங்களில் பொறுப்பேற்கும் எனத் தெரிகிறது.
நிபந்தனையுடனே ஆதரவு: காங்கிரஸ்
தில்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முன்வந்துள்ள ஆம் ஆத்மி அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலுக்கு முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேர்தலின் போது ஆம் ஆத்மி அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாதவை என்பதை காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
ஆனால், அவற்றைச் செயல்படுத்த முடியும் என ஆம் ஆத்மி தலைவர்கள் நம்புகின்றனர். மக்களின் சுமையைக் குறைப்பதாகக் கூறும் அவர்களின் கொள்கைக்காக மட்டுமே காங்கிரஸ் ஆதரவளிக்கிறது. அதனை நிபந்தனையற்ற ஆதரவாகக் கருதக் கூடாது' என்றார்.
தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், "மக்களுக்காக ஓர் அரசு அமைய வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறது.
 அந்த அடிப்படையில், ஆம் ஆத்மி ஆட்சி அமைவதை வரவேற்கிறோம். மக்களுக்கான நல்ல கொள்கைகளை ஆம் ஆத்மி கட்சி பின்பற்றும் வரை அதன் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்' என்றார்.
துணைநிலை ஆளுநர் அறிக்கை
தில்லியில் ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது குறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பிரதேச துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் அறிக்கை அனுப்பியுள்ளார்.
குடியரசுத் தலைவர் ஒப்புதல் தெரிவித்ததும் புதிய அரசு அமையும் தேதி அறிவிக்கப்படும் என்று துணைநிலை ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.  துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் முறைப்படி அழைப்பு விடுத்ததும், ராம் லீலா மைதானத்தில் "ஆம் ஆத்மி' அரசின் பதவியேற்பு நிகழ்வு நடைபெறும் எனத் தெரிகிறது.
தில்லிவாசிகளுக்கு நம்பிக்கை துரோகம்: பாஜக
"காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைக்க முடிவு செய்ததன் மூலம் தில்லி மக்களுக்கு ஆம் ஆத்மி கட்சி நம்பிக்கை துரோகம் செய்துவிட்டது' என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவடேர் கூறியதாவது: "காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது குறித்து மக்களின் கேள்விகளுக்கு ஆம் ஆத்மி பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளது. காங்கிரஸின் ஆதரவை ஒருபோதும் கோரமாட்டோம் என்று கேஜரிவால் முன்பு கூறிவந்தார்.
இப்போது ஏற்பட்டுள்ள திடீர் திருப்பத்தின் பின்னணியில் என்ன நிகழ்ந்தது? ஆதரவளிக்க காங்கிரஸ் என்னென்ன நிபந்தனைகளை விதித்துள்ளது? என்பதை மக்களிடம் ஆம் ஆத்மி கட்சி விளக்க வேண்டும்' என்றார்.
தில்லி பிரதேச பாஜக மூத்த தலைவர் ஹர்ஷ வர்தன் கூறியதாவது: பதவிக்காக கேஜரிவால் சமரசம் செய்து கொண்டு தனது கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டுள்ளார். தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக ஆம் ஆத்மியைத் தேர்வு செய்த தில்லி மக்களுக்கு அக்கட்சி நம்பிக்கை துரோகம் செய்துவிட்டது.
புதிய அரசு அமைக்க உள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவிக்க விரும்புகிறோம். தில்லி மக்களுக்கு அக் கட்சி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் வெற்றியடையவும் பிரார்த்திக்கிறோம்' என்றார் ஹர்ஷ வர்தன்.

கேஜரிவால் பெற்ற விருதுகள்
2004- முதல் முதலாக கேஜரிவாலுக்கு அசோகா பெல்லோ விருது வழங்கப்பட்டது.  அதைத் தொடர்ந்து, அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மைக்குப் பாடுபட்டதற்காக கான்பூர் ஐ.ஐ.டி. நிறுவனம் சத்யேந்திர கே. துபே நினைவு விருது வழங்கியது.
2006- சிறந்த தலைமைப் பண்புக்காக ராமன் மகசேசே விருது வழங்கப்பட்டது.
2009- கான்பூர் ஐ.ஐ.டி. நிறுவனமும் சிறந்த தலைமைப் பண்புக்கான விருதை வழங்கியது.
2011- சிறந்த மனிதர் என்ற விருதை அண்ணா ஹசாரேவுடன் சேர்ந்து இவருக்கு என்.டி.டி.வி. வழங்கியது.
2013- சி.என்.என்.-ஐ.பி.என். நிறுவனம் அந்த ஆண்டு அரசியலின் சிறந்த மனிதர் விருதை வழங்கியது.

கடந்து வந்த பாதை...
தில்லியில் அமையவிருக்கும் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான அரசில் முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள அரவிந்த் கேஜரிவால், ஹரியாணா மாநிலம், ஹைசர் என்ற ஊரில் 1968-இல் பிறந்தார். அவருடைய தந்தை கோவிந்த் ராம் கேஜரிவால் பொறியாளர். தாய் கீதா தேவி. மனைவி சுனிதா, வருமான வரித் துறையில் உயர் அதிகாரியாக பணிபுரிகிறார்.
 கேஜரிவால் ஹைசரில் உள்ள கேம்பஸ் பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்து, மேற்கு வங்கம், கரக்பூர் ஐ.ஐ.டி.யில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பட்டம் பெற்றார். 
 1989-இல் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் வேலை செய்தார். பின்னர் ஆட்சிப் பணித் தேர்வு எழுதி வருமான வரித் துறையில் இணை ஆணையராக 1995-இல் தில்லியில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தில் சேர்ந்தார். 1999-இல் மாற்றம் என்ற பொருள்படும் "பரிவர்த்தன்' என்ற பெயரில் தொண்டு நிறுவனத்தை நிறுவினார். அரசு அலுவலகங்களில் ஊழலுக்கு எதிரான பிரசாரங்களை அத் தொண்டு நிறுவனம் செய்ததுடன், பொதுமக்களுக்கு வருமான வரித் துறையில் நடக்க வேண்டிய வேலைகளுக்கும் உதவி செய்தது.
 2006, பிப்ரவரி மாதம் அரசுப் பணியில் இருந்து ராஜிநாமா செய்தார்.  அதன் பிறகு அவர் ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் அண்ணா ஹசாரேவுடன் சேர்ந்து தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தார். தகவல் பெறும் உரிமைச் சட்டம் வருவதற்கும் அவர் ஒரு காரணமாக இருந்தார்.
 லோக்பால் மசோதாவை உருவாக்குவதில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளில் ஒருவராக அரவிந்த் கேஜரிவாலை மத்திய அரசு நியமித்தது. அதன்பிறகு ஹஸாரே இயக்கத்தில் இருந்து வெளியே வந்த கேஜரிவால், 2012, நவம்பர் 26- ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சியைத் தொடக்கினார்.
  இந்த ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற்ற தில்லி பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் தனது கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தினார்.
 15 ஆண்டுகள் தில்லி முதல்வராகப் பதவி வகித்த ஷீலா தீட்சித்தை அவரது சொந்தத் தொகுதியிலேயே களம் கண்டு 25,864 வாக்குகள் வித்தியாசத்தில் கேஜரிவால் தோற்கடித்தார். அதைத் தொடர்ந்து தில்லியில் விரைவில் புதிய அரசை அமைக்க உள்ளார்.

No comments:

Post a Comment