24.12.13

தமிழகத்தில் காங்கிரஸை அசைக்க முடியாது: ஞானதேசிகன்


யார் எதிர்த்தாலும்,யார் வெறுத்தாலும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை அசைக்க முடியாது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் கூறினார்.

சத்தியமூர்த்தி பவனில் திங்கள்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அவர் பேசியது:
நாடு முழுவதும் சிறுபான்மை மத மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பது காங்கிரஸ் மட்டுமே.
ஒருநாள் அழைப்பில் இந்தளவு மக்கள் திரண்டிருப்பதைப் பார்க்கும்போது காங்கிரஸின் வலிமை புரிகிறது. மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும் அவை அனைத்தும் அன்பையும், சமாதானத்தையுமே போதிக்கின்றன.
கோபம் கொள்ளாமல் பொறுமையாகவும் அன்போடும் நடந்து கொள்ள வேண்டும் என்பது இயேசு கிறிஸ்துவின் போதனைகளில் முக்கியமானது. இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ தமிழக காங்கிரஸ் தலைவரான எனக்குப் பொருந்தும். இப்பதவிக்கு வருவதற்கு முன்பு முகம் சிவக்கும் அளவுக்கு கோபம் வரும். இப்போது என்னைப்போல பொறுமைசாலியை யாரும் பார்க்க முடியாது. அந்தளவுக்கு கட்சியின் தலைவர் பதவி  பக்குவப்படுத்தியுள்ளது.
நான் என்ற கொள்கையில் எனக்கு நம்பிக்கையில்லை. நாம் என்பதே உடன்பாடு. அதனால் தான் காங்கிரஸ் தலைவரானதும் அனைத்துத் தரப்பினரையும் அன்போடு அரவணைத்துச் செல்கிறேன். அதனை இந்த விழாவில் வெளிப்படுத்துவதில் மகிழ்ச்சி.
ஒரு கன்னத்தில் அறைந்தால் மற்றொரு கன்னத்தையும் காட்டு என்றார் இயேசு. என்னை யாராவது ஒரு கன்னத்தில் அறைந்தால் அவர்களுக்கு மறு கன்னத்தையும் காட்டுவேன். கன்னத்தை மட்டுமல்ல, முதுகையும் காட்டத் தயாராக இருக்கிறேன்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கென்று தனி பலம் உள்ளது. அது 2014-ஆம் ஆண்டு தேர்தலில் வெளிப்படும். யார் எதிர்த்தாலும், யார் வெறுத்தாலும் தமிழகத்தில் காங்கிரஸை அசைக்க முடியாது என்றார் ஞானதேசிகன்.
கட்சியின் மூத்த தலைவர் குமரிஅனந்தன், முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment