24.12.13

3.20 கோடி நிலுவை வழக்குகளுக்குத் தீர்வு எப்போது?

நாட்டில் கடந்த 11 ஆண்டுகளில் விரைவு நீதிமன்றங்கள் மூலம் 32 லட்சம் வழக்குகள் பைசல் செய்யப்பட்டிருந்தாலும், தீர்வு காணப்படாமல் இன்னும் 3.20 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு நீதியை விரைந்து வழங்குவதற்காக 11-வது நிதிக் குழுவின் பரிந்துரையின் பேரில், 2000-வது ஆண்டிலிருந்து விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.
இதற்காக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நேரடியாக நிதியை வழங்கி வந்தது. இந்த வகையில், 2000-2001 முதல் 2010-11-ஆம் நிதியாண்டு வரை மாநில அரசுகளுக்கு ரூ. 870 கோடியை மத்திய ஒதுக்கியிருந்தது. உத்தர பிரதேசத்திற்கு அதிகபட்சமாக ரூ.136 கோடி, பிகாருக்கு ரூ.93 கோடி ஒதுக்கப்பட்டது.
 நாட்டில் உள்ள 1,192 விரைவு நீதிமன்றங்கள் மூலம் 2011, மார்ச் வரை மொத்தம் 32,92,785 வழக்குகள் பைசல் செய்யப்பட்டுள்ளன. 2012-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை கீழமை நீதிமன்றங்களில் 2.70 லட்சம் வழக்குகளும், பல்வேறு உயர் நீதிமன்றங்களில் 44 லட்சம் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
 குஜராத் மாநிலத்தில்தான் 61 விரைவு நீதிமன்றங்கள் மூலம் அதிக அளவாக 4,32,296 வழக்குகள் பைசல் செய்யப்பட்டுள்ளன. உத்தர பிரதேசத்தில் 153 விரைவு நீதிமன்றங்கள் மூலம் 4,11,658 வழக்குகள், மகாராஷ்டிரத்தில் 51 விரைவு நீதிமன்றங்கள் மூலம் 3,81,619 வழக்குகள், மத்திய பிரதேசத்தில் 84 நீதிமன்றங்கள் மூலம் 3,17,363 வழக்குகள், தமிழகத்தில் 49 விரைவு நீதிமன்றங்கள் மூலம் 3,71,336 வழக்குகள் விசாரிக்கப்பட்டுள்ளன. பிகாரில் 179 விரைவு நீதிமன்றங்கள் மூலம் 2011, மார்ச் வரை 1,59,105 நிலுவை வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டன.
விரைவு நீதிமன்றத் திட்டம் நிறுத்தம்: 11 ஆண்டுகளுக்குப் பிறகு, விரைவு நீதிமன்றங்கள் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு 2011, மார்ச் 31-இல் நிறுத்தியது. எனினும், சில மாநில அரசுகள் தங்களது சொந்த நிதியின் மூலம் விரைவு நீதிமன்றங்களைத் தொடர்ந்தன.
இந்த வகையில், மொத்தம் 701 விரைவு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 2012 டிசம்பர் வரை பிகாரில் 183, மகாராஷ்டிரத்தில் 100 விரைவு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.
பணியாளர் பற்றாக்குறை: இந் நிலையில், மாவட்ட நீதிமன்றங்களிலும், கீழமை நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டாலும், பணியாளர்கள் பற்றாக்குறையால் அவை சிரமத்தைச் சந்தித்து வருவதாக தில்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.என். திங்கரா கூறினார். நிலுவை வழக்குகளை விசாரித்து முடிக்க கூடுதலாக நீதிபதிகளை நியமிக்க அரசு நடடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
பணிச்சுமையும் காரணம்: மூத்த வழக்குரைஞர் சுஷீல் குமார் கூறுகையில், "வழக்குகளின் நிலுவை அதிகரிக்க அரசு வழக்குரைஞர்களின் பணிச் சுமையும் ஒரு காரணமாகும்.
ஆகவே, அரசு வழக்குரைஞர்களை கூடுதலாக நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சில சமயங்களில் ஒரே வழக்குரைஞர் இரண்டு, மூன்று வழக்குகளில் ஒரே சமயத்தில் விசாரணைக்காக ஆஜராக வேண்டிய நிலை உள்ளது' என்றார்.
 விரைவு நீதிமன்றங்களுக்கு நிதி அளிப்பதை நிறுத்தும் அரசின் கொள்கையை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி உறுதி செய்தது.
அப்போது, கீழமை நீதித்துறையில் 10 சதவீதம் கூடுதல் பணிகளை உருவாக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
"சமூகத்தில் பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், விளிம்புநிலை பிரிவினர் ஆகியோருக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக போதுமான எண்ணிக்கையில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்' என்று அமைச்சர் கபில் சிபல் அண்மையில் மக்களவையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment