26.12.13

போலி என்கவுன்டர்: ராணுவத்தில் இருந்து 2 அதிகாரிகள் உள்பட ஆறு வீரர்கள் வெளியேற்றம்



காஷ்மீரில் போலி என்கவுன்டர் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட இரண்டு ராணுவ அதிகாரிகள், நான்கு வீரர்கள் ராணுவத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தில்லியில் உள்ள ராணுவ நீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
2010, ஏப்ரல் 30-ஆம் தேதி காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் ஊடுருவியதாக மூன்று பேரை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். பின்னர் அவர்களை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் என்று ராணுவம் அறிவித்தது.
இந்த நிலையில், சுட்டுக் கொல்லப்பட்ட மூவரும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களின் பெயர் ஷாஜாத் அகமது கான், ரியாஸ் அகமது கான், முகமது சயீஃப் எனவும் தெரிய வந்தது. வேலை வாங்கித் தருவதாக அவர்களை ராணுவத்தினர் அழைத்துச் சென்று பின்னர் பயங்கரவாதிகள் என்று சுட்டுக் கொன்றதாக மூவரின் குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து, பல்வேறு மனித உரிமை அமைப்புகள், அரசியல் கட்சிகள் இச் சம்பவத்தை போலி என்கவுன்டர் என்று கூறி விசாரணை நடத்த வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தின.
இதனால், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் சுமார் இரண்டு மாதங்கள் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக சோபூர் நீதிமன்றத்தில் இந்திய ராணுவத்தின் ராஜ்புத் படைப்பிரிவு கர்னல் டி.கே. பதானியா, மேஜர் உபிந்தர் மற்றும் நான்கு வீரர்கள் மீது காஷ்மீர் காவல் துறை சோபூர் நீதிமன்றத்தில் 2010-ஆம் ஆண்டில் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இச் சம்பவம் தொடர்பாக ராணுவ நீதிமன்றமும் தனியாக விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட இரு அதிகாரிகள் உள்பட ஆறு பேரும் குற்றம் இழைத்ததாகத் தெரிய வந்ததால், அவர்களை ராணுவப் பணியில் இருந்து வெளியேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment