26.12.13

வெங்காயம் விலை சரிவு நுகர்வோர் மகிழ்ச்சி; விவசாயிகள் கண்ணீர்



வெங்காயத்தின் விலை ரூ. 15 ஆக சரிவடைந்துள்ளதால், நுகர்வோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில், சாகுபடி செய்த விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர்.
   தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் உணவுத் தயாரிப்பில் முக்கியப் பங்கு வகிப்பது வெங்காயம். வெங்காயத்தின் விலை உயர்ந்தால், பாதிக்கப்படுவது பொதுமக்கள் மட்டுமின்றி, ஆட்சியாளர்களும்தான் என்பதை பல மாநிலத் தேர்தல் முடிவுகள் உறுதிபடுத்தியுள்ளன.
  அந்த அளவுக்கு பிரபலமான வெங்காயத்தின் விலை, கடந்த சில நாள்கள் வரை கிலோ ரூ. 90 என ஏறுமுகத்தில் இருந்தது. இந் நிலையில் திடீர் திருப்பமாக, தற்போது ரூ. 15 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முதல் தர வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ. 30 ஆக உள்ளது.
  மகாராஷ்ட்ர மாநிலம் புணே, நாசிக் பகுதிகளிலிருந்து பல்லாரி வெங்காயத்தின் வரத்து அதிகரித்ததால், சின்ன வெங்காயத்தின் விலை குறைந்துள்ளது என்கிறார், திண்டுக்கல் வெங்காயத் தரகு மண்டி சங்கத் தலைவர் ஏ. பெருமாள்சாமி. மேலும் அவர் கூறியது:
   கடந்த சில மாதங்களாக பல்லாரி வெங்காயத்தின் வரத்து குறைவாக இருந்ததால், பல்லாரி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை உயரத் தொடங்கின. தற்போது, மகாராஷ்ட்ர மாநிலத்தில் பல்லாரி விளைச்சல் அதிகரித்துள்ளதால், வரத்தும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
  புணே, நாசிக் பகுதிகளிலிருந்து, திண்டுக்கல்லுக்கு மட்டும் வாரத்துக்கு 3 முறை தலா 150 டன் பல்லாரி வெங்காயம் லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகின்றன.  இதனால், கிலோவுக்கு ரூ. 50 முதல் ரூ. 80 வரை விற்ற பல்லாரி, தற்போது ரூ. 15 க்கு சரிந்துள்ளது.  விலை குறைந்ததை அடுத்து, சின்ன வெங்காயம் வாங்குவோர், அதிக அளவில் பல்லாரியை வாங்கத் தொடங்கினர்.
  இதனிடையே, திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும், திருச்சி மாவட்டம் துறையூரிலிருந்தும் சின்ன வெங்காயம் அதிக அளவு சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளன.
  இதன் காரணமாக, கடந்த வாரம் ரூ. 80-க்கு விற்ற சின்ன வெங்காயத்தின் விலையும், புதன்கிழமை ரூ. 15 ஆக சரிவடைந்துள்ளது. இந்த நிலை வரும் பொங்கல் பண்டிகை வரை நீடிக்கும் என்றார் அவர்.
   நுகர்வோருக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தும் வெங்காயத்தின் விலை வீழ்ச்சி, விவசாயிகளை கஷ்டத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து, திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அடுத்துள்ள பெருமம்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி எம். பழனிச்சாமி தெரிவித்தது:
  ஒரு ஏக்கரில் வெங்காயம் சாகுபடி செய்வதற்கு, விதைக்காய் வாங்குவதற்கு கிலோவுக்கு ரூ. 65 வீதம் மொத்தம் ரூ. 27,250, உழவுக்கு ரூ. 3000, நடவு கூலி ரூ. 2000, உரத்துக்கு ரூ. 6,500, பூச்சி மருந்து தெளிப்புக்கு ரூ. 2000, களை எடுப்புக்கு ரூ. 4000, அறுவடை செய்வதற்கு ரூ. 4000 வழங்க வேண்டியுள்ளது.
  போதிய அளவு பருவமழை பெய்யாததால், பெரும்பாலான விவசாயிகள் விலை கொடுத்து தண்ணீர் வாங்கி சாகுபடி செய்தோம். அறுவடை செய்த வெங்காயத்தை சந்தைக்கு கொண்டு வருவதற்கான லாரி வாடகை உள்பட மொத்தம் ரூ. 60 ஆயிரம் வரை செலவு ஏற்பட்டுள்ளது.
  ஏக்கருக்கு 6 டன் வெங்காயம் கிடைத்தால், அதில் கழிவு போக 4 டன் மட்டுமே மிஞ்சுகிறது. இந்த சூழ்நிலையில் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், தரமான வெங்காயத்துக்கும் கிலோவுக்கு ரூ. 15 மட்டுமே கிடைக்கிறது.  இதனால், கடந்த 3 மாதமாக கஷ்டப்பட்டு வெங்காயம் சாகுபடி செய்ததற்கு, உழைப்புக்கான கூலி கூட கிடைக்காமல் போய்விட்டது. விலை வீழ்ச்சியால், வெங்காயம் சாகுபடி செய்த அனைவருக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment