26.12.13

3.45 கோடி இலவச வேட்டி, சேலைகள்: பொங்கலுக்குள் வழங்க நடவடிக்கை

பொங்கல் பண்டிகைக்குள் 3.45 கோடி இலவச வேட்டி, சேலைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக கைத்தறித் துறை அமைச்சர் டாக்டர் எஸ். சுந்தரராஜ் புதன்கிழமை ராமநாதபுரத்தில் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக இலவச வேட்டி 1.72 கோடி வழங்கப்படவுள்ளது.
இதில் 1.52 கோடி வேட்டிகள் கொள்முதலும் செய்யப்பட்டு விட்டன. இலவச சேலை 1.73 கோடி வழங்கப்படவுள்ளது. இதில் இதுவரை 56 லட்சம் சேலைகள் கொள்முதலும் செய்திருக்கிறோம்.
வேட்டி உற்பத்தியை தற்போது நிறுத்திவிட்டு சேலைகள் உற்பததியை தீவிரப்படுத்தியுள்ளோம். தரமான நூலில் சேலைகளை தயாரிப்பதன் காரணமாக சேலை உற்பத்தி தாமதமாகி வருகிறது. இருப்பினும், தேவைப்படும் அனைவருக்கும் முதல்வர் உத்தரவின்படி, பொங்கலுக்குள் இலவச வேட்டை,சேலை வழங்கப்பட்டு விடும்.
இந்தியாவிலேயே தமிழகம்தான் கைத்தறித் துணிகள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. கடந்த 2012ஆம் ஆண்டு ரூ. 217 கோடிக்கு உற்பத்தி செய்யப்பட்டது.
இந்த ஆண்டு ரூ. 246 கோடிக்கு உற்பத்தி செய்து, தேசிய அளவில் தமிழகம் கைத்தறி உற்பத்தியில் முதலிடத்தை எட்டியிருக்கிறது. தமிழகத்தில் தேனி, கன்னியாகுமரி, அறந்தாங்கி, எட்டயபுரம், கிருஷ்ணகிரி ஆகிய 5 ஊர்களிலும் உள்ள நூற்பாலைகளை நவீனப்படுத்துவதற்கு ரூ.104.41 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நூற்பாலைகளில் உற்பத்தியாகும் நூலின் தன்மையை உயர்த்தவும், உற்பத்தியை இரு மடங்காக ஆக்கவும் இந்த நிதியை தமிழக அரசு ஒதுக்கியிருக்கிறது.
ராமேசுவரத்தில் விரைவில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் பணிமனை துவக்குவதற்கான பணிகளையும் செய்து வருகிறோம்.
அப் பணிமனை ராமேசுவரத்தில் அமைந்த பிறகு அங்கிருந்து திருப்பதி, பெங்களூர் உள்ளிட்ட வெளி மாநில முக்கிய நகரங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் ஏராளமான பஸ்கள் இயக்கப்படும்.
அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் கடந்த ஆண்டு வரை நஷ்டத்தில் இயங்கி வந்தது. இந்த ஆண்டு முதல் அந்த அரசு நிறுவனமும் லாபத்தில் இயங்கி வரத் தொடங்கியிருக்கிறது.
ராமநாதபுரத்தில் சாலைகள் மேம்பாட்டுக்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ராமேசுவரத்தில் ரூ.150 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி இந்த ஆண்டு முதல் துவங்க இருப்பதாகவும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 1200 ஊருணிகளை மேம்படுத்திட அரசு நிதி ஒதுக்கியிருப்பதாகவும் அமைச்சர் டாக்டர்.எஸ். சுந்தரராஜ் தெரிவித்தார்.
பேட்டியின்போது, தமிழக சேமிப்புக் கிடங்கு வாரியத் தலைவர் ஜி.முனியசாமி உடனிருந்தார்.

No comments:

Post a Comment