26.12.13

இந்தியாவுடனான பேச்சுவார்த்தையில் வீட்டுப்பணியாளர்கள் பிரச்னையும் இடம்பெறும்: அமெரிக்கா

இந்தியாவுடனான இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது, வீட்டுப் பணியாளர்கள் பிரச்னையும் இடம்பெறும் என்று அமெரிக்கா புதன்கிழமை அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட சலுகைகளை மத்திய அரசு பறித்திருப்பதை அடுத்து, அதற்கு பதிலடியாக இந்த அறிவிப்பை அந்நாடு வெளிட்டுள்ளது.
பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில், தேவயானி கோப்ரகடே கைது விவகாரத்தில் விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்தியாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.
பல்வேறு விவகாரங்களில் தீர்வு காண்பது தொடர்பாக இந்தியாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருப்பதாக தெரிவித்துள்ள அவர், இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது இந்திய தூதரக அதிகாரிகள் தங்களது வீடுகளில் பணியில் அமர்த்தியுள்ள பணியாளர்களின் பிரச்னைகளும் இடம்பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தேவயானி கோப்ரகடே கைது விவகாரத்தில் அமெரிக்காவுக்கு பதிலடி அளிக்கும் வகையில் இந்தியா நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கு பல்வேறு சலுகைகளுடன் அளிக்கப்பட்டிருந்த அடையாள அட்டைகளை திரும்பப் பெற்றுக் கொண்டு, அந்நாட்டில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருப்பது போன்று குறைந்த சலுகைகளுடன் கூடிய புதிய அடையாள அட்டைகளை வழங்கியது. மேலும், இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளின் குடும்பத்தினர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சட்ட காப்புரிமையையும் இந்தியா வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment