26.12.13

இலங்கை நல்லிணக்க பேச்சுவார்த்தையில் தேக்கநிலை


இலங்கையில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது.

இத்தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். அவர் கொழும்பில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை மேலும் கூறியதாவது:
அதிபர் ராஜபட்ச, பேச்சுவார்த்தைக்கு வருமாறு எங்கள் கட்சியை அழைத்துள்ளார். தமிழர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்வுக் குழு குறித்து அவர்கள் மீண்டும் பேசப் போகிறார்களா என்பது தெரியாது.
அவர், அது குறித்து தெளிவுபடுத்தாத வரை இந்த விவகாரத்தில் நிச்சயமற்ற தன்மையே நிலவும்.
மேலும், அந்தத் தேர்வுக் குழுவால் அர்த்தமுள்ள, பலனளிக்கக் கூடிய விஷயம் எதுவும் நடந்து விடும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.
ராஜபட்ச உருவாக்கிய நாடாளுமன்ற தேர்வுக்குழுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மற்ற எதிர்க்கட்சிகளும் ஏற்கெனவே புறக்கணித்தன.
இதனிடையே, தமிழர்களின் தீர்க்கப்படாத பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆலோனைக் கூட்டம் வவுனியாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
6 மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வடக்கு மாகாண கவுன்சில் சுமுகமாகச் செயல்படுவது உள்ளிட்ட தமிழர்கள் தொடர்புடைய பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.
முன்னதாக, வடக்கு மாகாணக் கவுன்சிலுக்கு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment